அன்ரிஜன் பரிசோதனை..
வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சேர்ந்த வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களிற்கு அன்ரிஜன் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
வவுனியா நகர்பகுதியில் எழுமாறாக நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 55 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகரின் ஒரு பகுதி கடந்த சில நாட்களாக முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளை சேர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்நிலையில அடுத்த வாரமளவில் நகரத்தில் முடக்கப்பட்ட பகுதிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
அந்தவகையில் இதுவரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படாத ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்கள் என கடந்த மூன்று நாட்களுமாக 717 பேருக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் வைத்து அன்ரிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அன்ரிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. குறித்த நடவடிக்கைகளிற்கு வவுனியா வர்த்தக சங்கமும் தமது ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.