கடற்பரப்பில் உயிரிழந்த இலங்கைத் தமிழன் : நிர்க்கதியாகியுள்ள மனைவி மற்றும் பச்சிளம் குழந்தை!!

615


சாம்சன் டார்வின்..


இலங்கையின் கடற்பரப்பில் உயிரிழந்த நான்கு மீனவர்களில் ஒருவரான சாம்சன் டார்வினின் மனைவி தனது கணவரை இழந்து கைக்குழந்தையுடன் நிர்க்கதியாகியுள்ளார்.இலங்கைத் தமிழரான சாம்சன் டார்வின் கடந்த 2009ஆம் ஆண்டு தமிழகம் சென்றுள்ள நிலையில் இலங்கை தமிழர்களுக்கான முகாமில் தங்கியிருந்துள்ளார்.


இதன்போது அதே முகாமை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் சாம்சன் டார்வினுக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.


டார்வின் – விஜயலட்சுமி தம்பதிக்கு 20 நாட்களுக்கு முன்னரே குழந்தை பிறந்துள்ள நிலையில், தமது குழந்தையை முழுமையாகத் தூக்கி கொஞ்ச கூட முடியாத நிலையில் தனது கணவர் உயிரிழந்துவிட்டதாக கதறியழுகிறார் விஜயலட்சுமி.

இதேவேளை நிர்க்கதியாகியுள்ள சாம்சன் டார்வினின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. நெடுந்தீவு கடலுக்கு அப்பால் உள்ள பகுதியில், கடந்த 18ஆம் திகதி தமிழகத்தின் மண்டபம் முகாமைச் சேர்ந்த சாம்சன் டார்வின்,

உச்சிப்புளி வட்டான்வலசை பகுதியைச் சேர்ந்த நாகராஜன், தாத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, அவர்களின் படகு இலங்கை கடற்படை கப்பலுடன் மோதியுள்ளது.

இதனையடுத்து படகு மூழ்கிய நிலையில் அதிலிருந்த நான்கு மீனவர்களும் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளின் போது மீனவர்கள் நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து சடலங்கள் இந்தியக் கடலோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.