வவுனியாவில் கிலோ 460 ரூபாவிற்கு உழுந்தினை கொள்வனவு செய்யும் கமநல திணைக்களம்!!

3642

உளுந்து..

வவுனியாவில் குறைந்த விலைக்கு விவசாயிகளிடமிருந்து உழுந்தினை தனியார் துறையினர் கொள்வனவு செய்து வருகின்ற நிலையில் உழுந்தினை உறுதிப்படுத்தப்பட்ட விலையான 460 ரூபாவிற்கு கமநல திணைக்களத்தில் வழங்க முடியுமென வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்தார்.

உழுந்து கொள்வனவு தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் உழுந்து அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில் விவசாயிகளிடமிருந்து தனியார் துறையினர் மிகக் குறைந்த விலைக்கே உழுந்தினை கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதனையடுத்து விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு அத்தாட்சிப்படுத்தப்பட்ட விலையான 460 ரூபாவிற்கு உழுந்தினை கமநல திணைக்களம் கொள்வனவு செய்ய தயாராகவுள்ளமையினால் விவசாயிகள் அருகேயுள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் உழுந்தினை வழங்க முடியுமெனவும்,

ஒரு கிலோ உழுந்தினை 460 ரூபாவிற்கு அதிகமாக தனியார் துறையினர் கொள்வனவு செய்வார்கள் எனில் தனியார் துறையினருக்கு வழங்குமாறு அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.