கொரோனா ஊசி மருந்தை வழங்குவதன் மூலம் மட்டும் பாதுகாப்பு கிடைக்காது : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

682

கொரோனா..

கொரோனா ஊசி மருந்தை ஒருவருக்கு வழங்குவதன் மூலம் மாத்திரம் அவருக்கு அதில் இருந்து பாதுகாப்பு கிடைக்காது எனவும், அதற்கு சில காலம் செல்லும் என்பதால், சுகாதார வழிக்காட்டல்களை தொடர்ந்தும் பின்பற்றுவது குறித்து மக்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொகுப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று ஒளிப்பரப்பான விவாத நிகழ்ச்சியில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த ஊசி மருந்து குறித்து எமக்கு 100 வீதம் தெரியாது. இது தொடர்பான பரிசோதனைகள் சில இடங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊசி மருந்தை போட்டுக்கொண்டோம் என்பதால் அன்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும், கிடைக்காது என்பதை மக்கள் அறிந்துக்கொள்ள வேண்டும்.

ஒரு ஊசி மருந்தை போட்டுக்கொண்ட பின்னர் 4 முதல் 12 வாரங்களிலேயே அது செயற்பட ஆரம்பிக்கும். எனினும் 4 வாரங்களின் பின்னர் நாம் இரண்டாவது ஊசி மருந்தை போட்டுக்கொள்ள வேண்டும். இதன் பின்னர் இரண்டு, மூன்று வாரங்களில் நாம் எதிர்பார்த்த பாதுகாப்பு கிடைக்கும். இந்த ஊசி மருந்து 80 வீதம் பலன் தரும் என்றே கூறுகின்றனர்.

ஊசி மருந்தை போட்டுக்கொண்டவர்களில் 20 வீதமானவர்களுக்கு கொரோனா தொற்றக்கூடும். நான் ஊசி மருந்தை போட்டுக்கொண்ட பின்னர் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலத்திற்கு உடலில் இருக்கும் என்பது கேள்வி.

ஒருவரிடம் இருந்து பரவுவதை தடுக்க முடியுமா என்பது தெரியாது. அது இன்னும் ஆராய்ச்சி மட்டத்திலேயே உள்ளது எனவும் மருத்துவர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-