சுவையான காளான் மற்றும் பச்சை பட்டாணி குழம்பு…

703

mushroom curry

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற காளான் மற்றும் பச்சை பட்டாணி குழம்பு  செய்வது எப்படி என்று படித்துப் பார்த்து நீங்களும் முயற்சி செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்..

காளான் – 250 கிராம்
பச்சை பட்டாணி – 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
துருவிய தேங்காய் – 1/2 கப்
மிளகாய் தூள் – 3/4 கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 கரண்டி
மல்லி தூள் – 1 கரண்டி
கரம் மசாலா – 3/4 கரண்டி
கடுகு – 3/4 கரண்டி
சீரகம் – 1 கரண்டி
வெந்தயம் – 1/4 கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் -தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை..

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி பச்சை பட்டாணியைப் போட்டு நன்கு 10-15 நிமிடம் பட்டாணி வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய காளானை சேர்த்து 5-6 நிமிடம் வதக்கி, இறக்க வேண்டும். பின்பு மிக்ஸியில் முந்திரி மற்றும் தேங்காய் சேர்த்து, வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். மசாலாக்களானது நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, கலவையும், எண்ணெயும் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.

பின்பு அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து, 2-3 நிமிடம் கிளறி, 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். இறுதியில் காளான் மற்றும் பட்டாணியை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு 5-6 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான காளான் பச்சை பட்டாணி குழம்பு ரெடி.