வவுனியா புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது போராட்டம்!!

1950


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை..



பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 3ஆம் நாளான இன்று (05.02.2021) இரவு 8.30 மணியளவில் வவுனியா புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.



பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 3ம் நாளான இன்று வவுனியாவில் நிறைவு பெற்றுள்ளது.




வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல் நிலங்கள் அபகரிப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்,


காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி அவற்றை கண்டித்தும் நீதி கோரியும் தீர்வு கேட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றது.

இன்று காலை 09 மணிக்கு திருகோணமலையில் ஆரம்பித்த பேரணி தென்னமரவடி கொக்கிளாய் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தினை அடைந்திருந்தது. அங்கிருந்து புதுக்குடியிருப்புநோக்கி சென்று ஒட்டுசுட்டான் சந்தியை அடைந்து,


இரவு 7 மணியளவில் நெடுங்கேணியை ௮டைந்து அங்கிருந்து புளியங்குளம் ஊடாக வவுனியா மாவட்டத்தை அடைந்த நிலையில் போராட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது.

நாளையதினம் காலை 7.30 மணிக்கு வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து போராட்டம் மீண்டும் ஆரம்பமாகி ஏ9 வீதியூடாக மணிக்கூட்டு கோபுரம் வரை சென்று கடைவீதி ஊடாக நகர பள்ளிவாசல்வரை சென்று அங்கிருந்து கொறவபதானை வீதி வழியாக மன்னார் வீதிக்குசென்று அங்கிருந்து மன்னார் மாவட்டம் நோக்கி பயணமாகும்.