மாற்றத்திற்காக ஒன்றிணைவோம் : வடமாகாண முதலமைச்சரின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி!!

362

vigneswaranஉலகெங்கிலும் இன்று சர்வதேச மகளிர்தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், “மாற்றத்திற்காக ஒன்றிணைவோம்” என வடமாகாண முதலமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில்,

ஏறத்தாழ 30 வருட காலப் போரினால் ஏற்பட்ட இழப்புக்களைத் தாங்கி நவீன சமூக, பொருளாதார, கலாசார மாற்றத்திற்கு ஈடு கொடுத்து முன்னேறி வரும் வடக்கு மாகாண மகளிரைப் பார்க்கும் பொழுது “கண்ணீர்த்துளியில் வைரங்கள் செய்யும் கலையைக் கற்றுக் கொள்” என்னும் கவித்துவமான வரிகள் நினைவுக்கு வருகின்றன.

சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 இன்று “மாற்றத்திற்காக ஒன்றிணைவோம்” என்ற மகுட வாசகத்தின் கீழ் ஒன்றிணைந்து செயற்படும் பெண்களின் மனப்பாங்கு சர்வதேச தரத்திற்கு விரிந்திருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

எமக்கான பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் வெளியிலிருந்து ஒரு தீர்வு கிடைக்குமென எதிர்பார்த்துக் காத்திருப்பதை விட சவால்களுக்கு முகங்கொடுத்து சாதிக்குஞ் சக்திகளாக பெண்கள் உருவெடுத்துள்ளார்கள்.

இது பாராட்டுக்குரியது. சக்தியானது தான் இருப்பதற்கு இடத்தைப் பிடிக்காது, இருப்பது கூட கண்ணுக்குத் தெரியாது. ஆனால் அனைத்தையும் இயக்கும். அவ்வாறே எமது பெண்கள் தமது திறனின் உதவியுடன் எமது சமூகத்தை மாற்றியமைக்க முன் வருவார்கள் என்று திடமாக நம்புகின்றேன்.

முதலமைச்சரின் அமைச்சின் ஒரு அங்கமான மகளிர் விவகார அலகு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெண்கள் தமது வாழ்க்கைத் தரத்தை தாமே மேம்படுத்திக் கொள்ள களமமைத்துக் கொடுக்கும் வகையில் பெண்களுக்கெதிரான அனைத்து பாரபட்சங்களையும் ஒழித்து அர்ப்பணிப்புடன் செயற்படும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி “மாற்றத்திற்காக ஒன்றிணைவோம்” என்று கூறி மகளிர் அனைவரையும் இத்தினத்தில் மனதார வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றேன்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்,
வடமாகாணசபை.