வவுனியாவில் மொத்த வியாபாரிகள் வீதியினை மறித்து போராட்டம்!!

3326

மொத்த வியாபாரிகள்..

வவுனியா- திருகோணமலை பிரதான வீதியான ஹொரவப்பொத்தானை வீதியினை வழிமறித்து இன்று (06.02.2021) அதிகாலை 4.30 தொடக்கம் தற்போது வரை வவுனியா மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா நகரில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாகவும் வவுனியா மொத்த மரக்கறி வியாபாரிகள் சந்தையில் சமூக இடைவெளியினை பேணுவதில் கடினமான சூழல் காணப்பட்டதனையடுத்து வவுனியா அரசாங்க அதிபரின் உத்தரவின் அடிப்படையில்,

291 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா கண்டி வீதியில் அமைக்கப்பட்டு பயன்பாடற்ற நிலையில் காணப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தினை தற்காலிகமாக மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனையினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு மூன்று வாரங்களுக்கு மேலாக குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனை என்பன இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் பொருளாதார மத்திய நிலையத்தில் தமக்கு பொதுமான வசதிகள் இல்லை என தெரிவித்து மரக்கறி மொத்த வியாபாரிகள் இன்று (06.02.2021) வழமையாக மரக்கறி விற்பனை மேற்கொண்டு வந்த மொத்த மரக்கறி விற்பனை நிலையத்தினை திறந்து வியாபார நடவடிக்கையினை முன்னெடுக்க முற்பட்ட சமயத்தில் மரக்கறி மொத்த விற்பனை நிலையத்தினை திறப்பதற்கு பொலிஸார் தடை விதித்தனர்.

அதனையடுத்து அதிகாலை 4.30 மணி தொடக்கம் மரக்கறி மொத்த வியாபாரிகள் வவுனியா- திருகோணமலை பிரதான வீதியான ஹொரவப்பொத்தானை வீதியினை வழிமறித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் திறக்க விடு திறக்க விடு சந்தையினை திறக்க விடு, வாழ விடு வாழ விடு விவசாயிகளை வாழ விடு, விவசாயத்தினை வைத்து சுயலாபம் காணதே, சந்தையினை மட்டும் திறக்க விடாதது ஏன்?,

அடிக்காதே அடிக்காதே விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே , வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் , சுகாதார பிரிவினர் பரிசோதனை செய்தும் திறக்க விடாதது ஏன் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்ட இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான காதார் மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், குலசிங்கம் திலிபன் ஆகியோர் சென்று போராட்டத்திலிருந்தவர்களுடன் கலந்துரையாடியதுடன் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கிச் சென்றனர்.

எனினும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் தற்போது வரை தொடந்த வண்ணமேயுள்ளது.