வவுனியாவில் டெக்போல் (TeqBall) விளையாட்டு அறிமுகம்!!

1406


டெக்போல்..


இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய விளையாட்டான டெக்போல் விளையாட்டு வவுனியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இன்று (15.02.2021) காலை வவுனியாவில் டெக்போல் விளையாட்டுக்கான சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டது. வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார், டெக்போல் சம்மேளனத்தின் வவுனியா இணைப்பாளர் அன்று அன்ஸலி ஆகியோர் முன்னிலையில் இந்த சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டது.


சம்மேளனத்தின் தலைவராக வவுனியா நகரசபையின் தலைவர் தேசபந்து கேளதமன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை, செயலாளராக விமலசந்திரன் தெரிவு செய்யப்பட்டார்.


பொருளாளராக ராஜ்சங்கர் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை உபதலைவர்களாக பர்சூக், விந்துஜன், நிமலகேசன், சேகர் ஆகியோரும், உப செயலாளராக அமலன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாகசபை உறுப்பினர்களாக டன்ஸ்டன், கலைத்தேவன், விநாயகமூர்த்தி, தர்மிகா, சற்சொரூபன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். மேலதிக அராசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் போசகராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள், விளையாட்டுக் கழகங்களைச் சார்ந்தவர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய மேலதிக அராசாங்க அதிபர் திரேஸ்குமார் “இந்த புதிய விளையாட்டுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும். இந்த நிர்வாகம் மாத்திரமன்றி மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் கல்வி திணைக்களம், பாடசாலை சார்ந்த விளையாட்டு துறை சார்ந்தவர்கள் பயிற்சிகளை வழங்கி நல்ல வீரர்களை உருவாக்க வேண்டும். அதற்காக அனைவரும் செயற்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தலைவராக தெரிவு செய்யப்பட்ட கெளதமன் உரையாற்றும் போது நகரசபையின் மேடையினை இப்போது இந்த விளையாட்டுக்கு வழங்குவதாகவும், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் ஒரு இடத்தை டெக்போல் விளையாட்டுக்கு ஒதுக்கித் தருவதாகவும், அத்துடன் நகரசபையில் இந்த விளையாட்டுக்கு தேவையான வளங்களை பாவிப்பதற்கு ஏற்பாடுகள் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்ட பின்னர், இலங்கை டெக்போல் சம்மேளத்தினால், வவுனியா சம்மேளனத்திற்கு டெக்போல் விளையாட்டுக்கான மேசை கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கால் மேசைப்பந்து திட்ட முகாமையாளர் கோபிநாத், உபதலைவர் கேதீஸ்வரன்,

நிறைவேற்று உறுப்பினர் ரஞ்சித், ஆகியோர் கலந்து கொண்ட அதேவேளை வவுனியா சம்மேளனத்தை சேர்ந்தவர்களுடன், வவுனியா டெக்போல் இணைப்பாளர் அன்று அனஸ்லியும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா சிறைச்சாலைகள் அத்தியட்சகர் பிரபாகரன் கலந்து கொண்டார்.

டெக்போல் விளையாட்டானது உலகக் கிண்ண போட்டிகளாக விளையாடப்பட்டு வருகிறது. ஆசிய கால் மேசைப்பந்து விளையாட்டு போட்டிகளில் இலங்கை அணியும் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை 2022 ஆம் ஆண்டு முதல் இலங்கை தேசிய விளையாட்டு போட்டிகளுக்குள்ளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.