யாழ். தென்மராட்சி ஆசிரியைக்கு கொரோனா : வடக்கில் நேற்று 5 பேருக்குத் தொற்று உறுதி!!

913

கொரோனா..

வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் பூநகரியில் பணியாற்றும் யாழ். தென்மராட்சி, தனங்கிளப்புப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

“யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 376 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் இருவருக்கு கோவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பஸ்ஸில் பயணித்தவர்களிடம் கேரதீவில் வைத்து பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவர். மற்றையவர் தனங்கிளப்புப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை. இவர் பூநகரியில் பணியாற்றும் நிலையில் பஸ்ஸில் பயணித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 414 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 3 பேருக்குக் கோவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் கிளிநொச்சி – கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள். அத்துடன் இவர்கள் கரைச்சியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்களாவர்” – என்றார்.