வவுனியா A9 வீதியில் உள்ள தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் கடந்த 7ம் திகதி திரிசூலமொன்றினால் பாடசாலை யன்னல் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டுள்ளது.
பாடசாலையின் யன்னலினை திரிசூலத்தனால் உடைத்து யன்னல் கம்பியை கழற்றி உள் இறங்கிய திருடர்கள் அங்கிருந்த கணனி ஒன்றினை களவாடிச் சென்றுள்ளனர்.
8ம் திகதி சனிக்கிழமை பாடசாலை நாள் என்பதால் பாடசாலை சென்ற ஆசிரியர்கள் யன்னல் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை பாடசாலையில் இருந்த குப்பைக்கூடையொன்றும் காணாமல் போயுள்ள காரணத்தால் திருடப்பட்ட கணினி அக் குப்பைக்கூடையினுள் மறைத்து கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பாடசாலை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இப் பாடசாலையில் இரவு நேர காவலாளிகள் இல்லாத நிலையில் அண்மைக்காலத்தில் மூன்றாவது தடவையாகவும் பாடசாலை கணினி திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.