வவுனியா மாவட்ட ஊர் சுற்றும் ஓட்டப் போட்டி 2021!!

2140

ஊர் சுற்றும் ஓட்டப் போட்டி..

வவுனியா மாவட்ட ஊர் சுற்றும் ஓட்டப் போட்டி வவுனியா பிரதேச செயலாளர் என்.கமலதாசன் தலைமையில் இன்று (27) நடைபெற்றது.

வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் சங்கம் மற்றும் வவுனியா மாவட்ட பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய இவ் ஊர் சுற்றும் ஓட்டப் போட்டியானது வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய முற்றலில் ஆரம்பமாகி நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன கலந்து கொண்டிருந்தார்.

ஆண் மற்றும் பெண் இருபாலருக்குமாக 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவ சான்றிதழ்களுடன் கலந்துகொண்ட ஊர் சுற்றும் ஓட்டப் போட்டியானது குடியிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய முற்றலில் ஆரம்பமாகி வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியை அடைந்து,

அங்கிருந்து வவுனியா குளக்கட்டு வழியாக பயணித்து பூந்தோட்டம் சந்தியை வந்தடைந்த ஓட்டப் பந்தய வீரர்கள் மீண்டும் குடியிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய முற்றலை வந்தடைந்தனர். இவ்வாறாக 10 கிலோமீற்றர் தூரத்தை மூன்று சுற்றுக்களாக ஓடி முடித்த வீரர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

முதல் 10 இடங்களுக்குள் வெற்றிபெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

ஆண்கள் பிரிவில் முதலாவது இடத்தை எஸ்.கிந்துசன், இரண்டாவது இடத்தை எஸ்.கபிலன், மூன்றாவது இடத்தை என்.நிசோபன் பெற்றுக்கொண்டனர்.

பெண்கள் பிரிவில் முதலாவது இடத்தை எஸ்.கேமம் பிரியா, இரண்டாவது இடத்தை ஜெ.தனுசிகா, மூன்றாவது இடத்தை எல்.கயாலினி பெற்றுக்கொண்டனர். வெற்றி பெற்ற ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அதிதிகளால் சான்றிதழ்களும், பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன், தலைவர் தமிழ் விருட்சம் அமைப்பு க.சந்திரகுமார் (கண்ணன்), வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் கெ.நவநீதன், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.