வாகன சாரதிகளின் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான கட்டணத்தை கைத்தொலைபேசி மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய பொலிஸ் பேச்சாளர் அஜித ரோஹன, வாகன சாரதிகள் குற்றங்கள் புரிந்தால், அந்த இடத்திலேயே வைத்து பொலிஸ் நிலையங்களின் ஊடாக குறித்த தண்டனை கட்டணங்கள் கைத்தொலைபேசியின் ஊடாக செலுத்தப்படவுள்ளன.
இது சாரதி மீண்டும் தமது அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொளவதற்காக பொலிஸ் நிலையம் செல்ல வேண்டிய நிலையை தவிர்க்கும் என்றும் பேச்சாளர் குறிப்பிட்டார்.
தற்போதையை முறையின்படி உதாரணத்துக்கு கொழும்பில் இருந்து வாகனத்தில் செல்லும் சாரதி மொனராகலையில் வைத்து சிறு குற்றங்களின் நிமித்தம் கண்டுபிடிக்கப்பட்டால் அவர் தண்டனை கட்டணத்துக்காக மொனராகலை பொலிஸ் நிலையத்துக்கு சென்று தண்டனை கட்டணத்துக்கான சீட்டை பெற்று அதனை அங்கிருக்கும் அஞ்சல் அலுவலகததில் செலுத்தவேண்டும்.
இதன்பின்னர் மீண்டும் அவர் அதே பொலிஸ் நிலையத்துக்கு சென்று தமது சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை உள்ளது.
இதனை தவிர்க்கும் முகமாகவே கைத்தொலைபேசி மூலமாக தண்டனை கட்டணங்களை செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.