கிளிநொச்சியில் பாடசாலை மாணவிகள் மூன்று பேரை கடத்திச்சென்ற நபர்களை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
முழுங்காவில் பகுதியினைச் சேர்ந்த மேற்படி மாணவிகள் மூவரும் முல்லைத்தீவிலுள்ள உறவினர் வீடொன்றில் பிறந்ததின விழாவில் கலந்துகொண்ட பின்னர், முல்லைத்தீவு – விசுவடுமடு பேரூந்தில் ஏறி விசுவமடுச் சந்தியில் வந்திறங்கியுள்ளனர்.
அவர்கள் பரந்தன் பேரூந்தில் ஏறுவதற்காக விசுவமடு பேரூந்துத் தரிப்பிடத்தில் நின்றவேளை, குறித்த மாணவிகளுக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர் வாகனத்தில் வந்துள்ளார்.
அந்த மாணவிகளின் அருகில் வாகனத்தை நிறுத்திய அவர், வாருங்கள் உங்களை உங்கள் வீடுகளில் கொண்டு சென்று விடுகின்றோம் என அழைத்துச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, வாகனத்தில் குறித்த மாணவிகள் ஏறியதும், இடைநடுவில் அந்த வாகனத்தில் மேலும் 3 இளைஞர்கள் ஏறியுள்ளனர்.
அவர்கள், மாணவிகளை விசுவமடுவுக்கு கடத்திச்சென்று அங்குள்ள வீடொன்றில் அடைத்து வைத்துள்ளனர். இதனை அவதானித்த பொதுமக்கள் சிலர் புதுக்குடியிருப்புப் பொலிஸாரிற்குத் தகவல் வழங்கியதையடுத்து, நேற்று இரவு அங்குவிரைந்த பொலிஸார், 4 இளைஞர்களையும் வீட்டின் உரிமையாளரான பெண்ணையும் கைது செய்ததுடன், அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 மாணவிகளையும் மீட்டுச் சென்றனர்.
விசாரணைகளைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளரான பெண் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார். 4 இளைஞர்களும் மாணவிகளும் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதுடன், 3 மாணவிகளும் இன்று முழங்காவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.