சசிகலா..
அரசியல் செயற்பாடுகளில் இருந்து தாம் விலகுவதாக சசிகலா அறிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.
நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று நமக்கு ஜெயலலிதா காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண்டர்கள் பாடுபடவேண்டும்.
என்மீது அன்பும், அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.
நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை முடிந்து திரும்பிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அமமுகவினர் உற்சாகத்தில் இருந்தனர்.
அதிமுகவை மீட்டெடுப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கூறியிருந்தார். அதேசமயம் சசிகலாவை அதிமுகவில் சேர்த்து, கட்சியை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையம் அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என கட்சி தலைமை திட்டவட்டமாக கூறிவிட்டது.
எனவே, சசிகலாவின் அரசியல் நகர்வு, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், அது திமுகவுக்கு சாதகமாகலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையிலேயே அரசியல் செயற்பாடுகளில் இருந்து தாம் விலகுவதாக சசிகலா அறிவித்துள்ளார்.