பக்கவாதமும் பிசியோதெரபி சிகிச்சையும் : தி.கேதீஸ்வரன்!!

2166

பங்கவாதம் அல்லது பாரிசவாதம் எனப்படும் ஸ்ரோக் நிலையினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது உடலின் ஒரு பகுதி (வலது அல்லது இடது) பகுதியாக அல்லது முழுமையாக செயலிழந்து இருப்பதை உணர முடியும்.

கைகளை அல்லது கால்களை அசைக்க முற்படும்போது தமது எண்ணத்திற்கு அவை உடன்படாததை அவதானிக்க முடியும். உதாரணமாக முழங்கையை மடிக்க முற்படும் போது அது முழுமையாக மடியாதிருப்பதையும் அல்லது பக்கவாட்டுக்கு அசைவதையும் அவதானிக்க முடியும்.

பாதிக்கப்பட்ட பகுதி சாதாரண பாகங்களை விட வேறுபட்டு உணரப்படும். கை மற்றும் கால் பாரமானதாகவும் விறைப்பு தன்மை உடையதாகவும் உணரப்படலாம். சிலருக்கு ஊசியால் குத்துவதை போன்ற வலியும் சிலரில் சூடாக்கவும் சிலரில் குளிராக்க இருப்பதை போலவும் உணரப்படலாம். பெரும்பாலும் இது ஒரு வலி நிறைந்த உணர்வாக இருக்கலாம்.

இவர்கள் இருக்கும்போதோ அல்லது நிற்கும்போதோ சமநிலையாக உடலை வைத்திருப்பதில் சிரமங்களை எதிர்நோக்கலாம். மேலும் பாதிக்கப்பட்ட பக்கமாக உடலை சமநிலையைப்படுத்த முடியாது கீழே விழுவதை போலவும் உணரப்படலாம்.

இவர்களில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மூட்டுக்களில் உறுதித் தன்மை குறைந்திருப்பதை உணர முடியும் மூட்டுக்களை பாதுகாக்கும் தசைகளின் உறுதித்தன்மை குறைடைவதால் இது நிகழ்கின்றது. இவ்வாறான நபர்களில் கவனயீனமாக கையாளுகையின் போது மூட்டுக்கள் பகுதியாக விலகுவது நிகழலாம். இது அதி தீவிரமான வலியை ஏற்படுத்தும்.

உதாரணமாக பாதிக்கப்பட்ட பக்க தோள்மூட்டு பகுதியை சரியான முறையில் பாதுகாக்காது அக் கையை இழுத்து நோயாளியை எழுப்புதல் அக் கையை தொங்க விட்டபடி அமர்த்தி வைத்திருத்தல் போன்ற சந்தர்ப்பங்களில் தோள்மூட்டு கீழ் நோக்கி விலகும். இது நோயாளிக்கு தீவிரமான இரணடாம் நிலை பிரச்சினையான Frozen shoulder என்ற தீவிர வலி நிலையினை உருவாக்கும்.

சிலரில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள கை மற்றும் கால்களிலில் உள்ள தசைகள் இறுக்க தன்மை கூடியதாக மாற்றமடையலாம். (பெரும்பாலும் முழங்கை, மணிக்கட்டு மற்றும் விரல் மூட்டுக்கள் பாதிக்கப்படும்) இதனால் அவர்களில் அசைவுச் செயற்பாடுகள் தீவிரமாக பாதிப்படையும்.

ஸ்ரோக் ஆனது மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு அல்லது வெடிப்பு ஏற்படுவதனால் ஏற்படுகின்றது. இதன்போது இரத்தம் கிடைக்காத மூளைக் கலங்கள் இறப்பதன் மூலம் மூளையின் அப்பகுதியினால் கட்டுப்படுத்தப்படும் உடலின் அசைவு மற்றும் உணர்வு செயற்பாடுகள் பாதிப்படையும் சிலரில் பேச்சு, பார்வை புலன், ஞாபக சக்தி போன்றவையும் பாதிக்கப்படலாம். மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவு பாதிக்கப்பட்ட பகுதி என்பவற்றிற்கேற்ப குறித்த நபரில் வெளிக்காட்டப்படும் பாதிப்பின் அளவு மற்றும் தன்மை மாறுபடும்.

ஸ்ரோக்கின் போது பாதிப்படைந்த அல்லது சிதைவடைந்த நரம்புக் கலங்களை மருந்துகள் மூலம் மீள உயிர்ப்பிக்க முடியாது. ஆனாலும் மூளையானது பாதிக்கப்பட்ட பகுதியை மீள ஒழுங்குபடுத்தி இழந்த செயற்பாடுகளை மீள உருவாக்கிக் கொள்ளும் தன்மை உடையதாக உள்ளது.

இது மூளையின் நெகிழ்வுத் தன்மை (Neuroplasticity) எனப்படுகின்றது. இச்செயற்பாடு ஒழுங்கான மருத்துவ செயற் திட்டத்தின் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட உடற் தொழிற்பாடுகளை மீள சரியான முறையில் மீண்டு கொள்ள முடியும். இச் சிகிச்சை முறைமை புனர்வாழ்வுச்சிகிச்சை முறை எனப்படும்.

ஸ்ரோக் உடலின் பல செயற்பாடுகளையும் பாதிப்பதனால் இதற்கான புனர்வாழ்வு சிகிச்சையின் போது பலதரப்பட்ட நிபுணர்கள் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகின்றது. அவர்களில் மருத்துவர்கள், தாதிகள், இயன்மருத்துவர்கள், தொழில்வழிச் சிகிச்சையாளர் பேச்சு வழி சிகிச்சையாளர்கள் என்போர் உள்ளடங்குகின்றனர்.

இயன்மருத்துவர்கள் எனப்படும் பிசியோதெரபிஸ்ட்கள் ஸ்ரோக்கினால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடற்தொழிற்பாடுகள் மற்றும் அசைவுச் செயற்பாடுகள் மேலும் பாதிப்படையாது தடுப்பதுடன் சீரான முறையில் அசைவு செயற்பாடுகள் மற்றும் உணர்வுத் தன்மை முன்னேற்றம் அடைந்து நோயாளர் தமது பழைய இயக்க நிலை அடைவதை உறுதிப்படுத்துவதில் உதவுகின்றனர்.

இதன் மூலம் இக்கட்டுரையின் முற்பகுதியில் கூறப்பட்ட பிரச்சினைகள் நோயாளிகளில் தீவிரமடைவதை குறைத்துக் கொள்ளவும் தீவிரமான நிலையிலிருந்து முன்னேற்றம் அடைவதையும் உறுதிப்படுத்த முடியும்.

பெரும்பாலும் ஸ்ரோக் நோயாளிகளில் பாதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்கு பின்னர் பிசியோதெரபி சிகிச்சை ஆரம்பிக்கப்படுகின்றது. பெரும்பாலும் ஆரம்ப கட்டங்களில் நோயாளி மருத்துவ விடுதியில் உள்ள போது ஸ்ரோக்கினால் நோயாளியில் ஏற்படும் இரண்டாம் நிலை பிரச்சினைகளை தவிர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

படுக்கை புண்களை தவிர்த்தல், DVT எனப்படும் கால்களில் குருதி உறையும் நிலையை தவிர்த்தல், மூட்டுக்கள் இறுக்கம் அடைதலை தவிர்த்தல், சுவாச பிரச்சினைகள் ஏற்படுதலை தவிர்த்தல் போன்றவற்றிற்கான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

உடல் சமநிலையை அதிகரித்தல், பாதிக்கப்பட்ட தசைகளின் வலுவை அதிகரித்தல், சக்கரநாற்காலி பாவனைப் பயிற்சி, நடப்பதற்கான பயிற்சி என்பன புனர்வாழ்வு சிகிச்சை நிலையம் அல்லது பிசியோதெரபி அறை போன்ற இடங்களில் இடம்பெறும் இதற்கு பரந்த இடம் மற்றும் விசேட உபகரணங்கள் தேவையாக இருக்கும்.

நோயாளர்கள் மருத்துவ விடுதியில் உள்ள போது வழங்கப்படும் பிசியோதெரபி சிகிச்சைகள் நோயாளர்களில் சீரான முன்னேற்றம் ஏற்படுவதை ஊக்குவிக்கின்றது. இதில் நோயாளரின் பராமரிப்பாளரின் பங்களிப்பு பெரும்பங்கினை வகிக்கின்றது.

இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் இயன் மருத்துவர்களின் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக உள்ளது. இதனால் குறைந்தளவு பிசியோதிரப்பிஸ்ட் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்களை பார்வையிடும் போது ஒரு நோயாளிக்கு குறைந்தளவு நேரத்தையே ஒதுக்ககூடியதாகவுள்ளது. எனவே நோயாளிகளின் பராமரிப்பாளர் நோயாளிகளின் ஆரம்பகட்ட சிகிச்சையில் பெரும் பங்களிப்பை வழங்க வேண்டிய தேவை உள்ளது.

இயன்மருத்துவர்களால் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு ஏற்ப நோயாளிகளின் பராமரிப்பாளர் நோயாளிகளுக்கு ஆரம்ப கட்ட பயிற்சிகளை வைத்திய விடுதியிலும் அங்கிருந்து விடுவிக்கபட்ட பின் வீடுகளிலும் செய்வது இன்றியமையாததாகும்.

நோயாளிகளின் பராமரிப்பாளர் நோயாளிக்கு வழங்க வேண்டிய பிசியோதெரபி பயிற்சிகள் தொடர்பான பூரண தௌிவை பெற்றிருப்பதுடன் அப் பயிற்சிகளை குறித்த நேர இடைவெளியில் சிறப்பான முறையில் வழங்குபவர்களாயின் நோயாளர்களில் வேகமான முன்னேற்றத்தினை ஏற்படுத்திக் கொள்வதில் எந்த தடையும் இல்லை.

தி.கேதீஸ்வரன்
பிசியோதெரபிஸ்ட்
மாவட்ட பொது வைத்தியசாலை – வவுனியா
077 8148351