இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!!

827

எரிவாயு..

உலக சந்தையில் எரிவாயுவின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமையினால் இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

அதற்கமைய இன்று அமைச்சரவை கூட்டத்தில் எரிவாயு விலை அதிகரிப்பு யோசனையை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் கொண்டு வரப்படவுள்ளது. அதற்கு அமைச்சரவை அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அரச தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டில் எரிவாயு விலையை அதிகரிக்காமையினால் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக லாப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த எட்டு மாதங்களாக உலக சந்தையில் எரிவாயு விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து வருகிறது. டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்புக் குறைவு காரணமாகவும், இறக்குமதிக்கான விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உள்ளூர் எரிவாயு வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த எட்டு மாதங்களாக தங்கள் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த மாதம் மட்டும் 300 மில்லியன் ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் எரிவாயு நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் எரிவாயு விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளன, ஆனால் அதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை.

எரிவாயுவிற்கான விலை சூத்திரம் இருந்தாலும், அதிகாரிகள் அதை அனுமதிக்காததால் எரிவாயு வர்த்தகம் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது என்று நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

-தமிழ்வின்-