ஓமந்தை, மருதங்குளம்..
வவுனியா – ஓமந்தை, மருதங்குளம் கிராம சேவகர் இடமாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டமொன்று இன்றைய தினம் (17.03.2021) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மருதங்குளம் கிராமசேவகர் காரியாலயத்தின் முன்பாக காலை 9 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் வைத்து கருத்து தெரிவித்த பொதுமக்கள்,
கிராம சேவகர் நியமிக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் கூட பூர்த்தி செய்யப்படுவதற்கு முன்பாக மாற்றப்படுகின்றார். அவர் எமது கிராம சேவகர் பிரிவில் சிறப்பான முறையில் இரவு பகல் பாராது நேர்மையாக பணியாற்றியுள்ளார்.
எமது கிராமத்தில் கிரவல் அகழ்வு பணியில் ஈடுபடும் தனிப்பட்ட ஒருவரிற்காக சில அரசியல் கட்சிகளின் செல்வாக்கினை வைத்துக் கொண்டு அடாத்தான முறையில் இவர் மாற்றப்படுவதை ஏற்க முடியாது.
தனிப்பட்ட ஒருவர் மண் அகழ்வதற்கு கிராமசேவகர் அனுமதி வழங்காத காரணத்தாலேயே அவர் மாற்றப்படுவதாக நாம் சந்தேகிக்கின்றோம். ஒரு நபருக்காக கிராம சேவகர் மாற்றப்பட்டால் சாதாரண மக்களின் நிலையை பாருங்கள்.
எனவே அவரை மாற்றுவதற்கான உறுதியான காரணத்தை எமக்கு தெரிவிக்க வேண்டும். அவரை மீளவும் நியமிக்கும் வரை வேறு எந்த கிராம சேவகரையும் இங்கு கடமையாற்ற அனுமதிக்கமாட்டோம்.
ஊருக்குள் ஏற்கனவே கிரவல் அகழ்ந்து பல கிடங்குகள் உருவாகியுள்ளன. அவற்றை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் வீதிகளும் பாழடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்களுக்கு உபதேசம் உங்களுக்கு இல்லையா?, பிரதேச செயலகம் மக்களுக்காகவா அல்லது மக்கள் பிரதேச செயலகத்திற்காகவா?, எங்கள் கிராம உத்தியோகத்தர் எங்களுக்கு வேண்டும் போன்ற பல்வேறான வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.