வவுனியா வைரவப்புளியங்குளம் குளப்பகுதிக்கு அருகே வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்!!

1271

கழிவுகளால் மக்கள் அசௌகரியம்..

வவுனியா வைரவப்புளியங்குளம் குளப்பகுதிக்கு அருகே வீதியோரத்தில் வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வைரவப்புளியங்குளம் குளத்தின் நீர்பாயும் கால்வாய் மற்றும் வீதியோரங்களில் கழிவுகள் வீசப்பட்டு வருகின்றன. வீட்டுக் கழிவுகள் , கடைக் கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் என அப் பகுதியில் வீசப்படுவதால் அப்பகுதி துர்நாற்றம் வீசுவதுடன் அவ் வீதியால் பயணிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

அங்கு வீசப்படும் கழிவுகள் ஓடும் நீரினாலும், நாய் மற்றும் காகம் போன்றவற்றினாலும் காவிச் செல்லப்படுவதனால் அயலில் உள்ள வீடுகளிலும் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சூழல் மற்றும் நீர் என்பன கழிவுகளால் மாசடைந்து வருவதுடன் தொற்றுநோய் பரவக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து வவுனியா நகரசபை கவனம் செலுத்தி கழிவு முகாமைத்துவத்தை மேற்கொண்டு தம்மை நிம்மதியாக வாழ வழியை ஏற்படுத்தவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.