இலங்கையை இன்று பரபரப்பாக்கிய கோர விபத்து : உயிர் தப்பிய சாரதி – பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

37675

கோர விபத்து..

பசறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தில் வீழ்த்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,

குறித்த பேருந்தினை செலுத்தி சென்ற சாரதி உயிருடன் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விபத்தில் சாரதி உயிரிழந்து விட்டதாக இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது.

சாரதி ஆசனத்தில் சிக்கியிருந்த நபரை வெளியே எடுக்கும் போது அவர் உயிரிழந்து காணப்பபட்டார். எனினும் அந்த நபர் சாரதி இல்லை என தற்போது தெரியவந்துள்ளது.

பேருந்து சாரதி லுணுகல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபர் எனவும் அவர் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் பசறை மற்றும் லுணுகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

வளைவில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விபத்து தொடர்பில் மோட்டார் வாகன பரிசோதகர்களினால் தொழில்நுட்ப பரிசோதகர்கள் பரிசோதிக்கவுள்ளனர்.

எனினும் பேருந்து முழுமையாக சேதமடைந்துள்ளமையினால் பரிசோதனை மேற்கொள்வதறகு சில காலமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து : 14 பேர் பலி, 47 பேர் படுகாயம்!!(CCTV காணொளி)

பதுளை – பசறை 13ஆம் மைல் கல் அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் 47 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பேருந்து 200 அடி பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லுனுகல பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்றே இன்று காலை 7.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 9 ஆண்களும் 5 பெண்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

எதிரே வந்த மற்றுமொரு வாகனத்திற்கு வழி கொடுப்பதற்காக ஓரமாக சென்ற வேளையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பதுளை பசறை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து : உடனடியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!!
விபத்து..

பதுளை – பசறை, 13ஆவது மைல்கல் பகுதியில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு முதற்கட்டமாக 15,000 ரூபாயை உடனடியாக வழங்க, ஊவா மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி,

பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்துடன், லுணுகலை பிரதேசசபையின் தவிசாளருடன் கலந்துரையாடி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான சவப் பெட்டிகளை வாங்கிக் கொடுக்கவும், அவர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார் என தெரியவருகிறது.

மேலும், சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கான நிதி உதவியை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை, காயமடைந்தவர்களுக்கான உரிய சிகிச்சைகளை வழங்கவும் தேவையேற்படின் அவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காகக் கொழும்புக்கு மாற்ற நடவடிக்கை முன்னெடுக்குமாறு, சுகாதாரத் துறையினருக்கு, செந்தில் தொண்டமான் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, விபத்துக்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, ஊவா மாகாண போக்குவரத்துக்கு ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ள அவர்,

விபத்துக்குள்ளான பேருந்தில் ஜீபிஎஸ் தொழிநுட்பம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அதைக் கொண்டு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு, ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.