பசறை கோர விபத்து : பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் உடல்கள் நல்லடக்கம்!!

15443


பசறை கோர விபத்து..



முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய பசறை, 13ஆம் கட்டை கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதையடுத்து பசறை – லுணுகலை நகரங்கள் முழுவதும் வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டு அனுதாபம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில் உயிரிழந்தவர்களில் சிலரின் உடல்கள், பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் நேற்றைய தினம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.



கோர விபத்தின் போது மக்கள் வெளிப்படுத்திய மனிதாபிமானம் : வைத்தியரின் நெகிழ்ச்சியான பதிவு!!


கோர விபத்தின் போது..


பதுளை – பசறை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தின் போது மக்களின் மனிதாபிமான செயற்பாடு குறித்து வைத்தியர் ஒருவர் நெகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளளார். பதுளை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ என்பவரே இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

200 அடிக்கும் கீழே விழுந்த பேருந்தில் இருந்து மக்களை காப்பாற்ற இன பாகுபாடு இன்றி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்றாக செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


சுமார் 500 இற்கும் மேற்பட்ட மக்கள் மனித சங்கிலியாக மாறி கீழே இறங்கி மக்களை காப்பாற்ற பெரிதும் உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வைத்தியர் பாலித ராஜபக்ஷ வெளியிட்ட பதிவில்,

“காலையில் வைத்தியர் சமரபந்துவிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக வருமாறும் அழைத்தார்.

நான் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று அனைத்து நடவடிக்கைகளையும் தயார் செய்தேன். ஊழியர்கள் 100 பேர் வரை ஆயத்தப்படுத்தினேன். 5, 6 அம்பியுலன்ஸ்களையும் ஏற்பாடு செய்தேன்.

பணிகளை ஆரம்பித்தவுடன் முதலில் கொண்டுவரப்பட்ட அனைத்தும் சடலங்களாகவே காணப்பட்டன. 250 – 300 அடி பள்ளத்திற்கு செல்வதென்பது மிகவும் ஆபத்தாகும். 2 முறை மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் நான். முழங்கால் ஊனமடைந்துள்ளது. ஆனாலும் செல்ல வேண்டிய கட்டாயம்.

25 – 30 கிலோகிராம் நிறையுடைய மருந்து பைகளை தூக்கிக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம். காயமடைந்தவர்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்தன. கற்பாறைகளும் உருண்டு வந்தன.

காப்பாற்ற சென்றவர்கள் பலர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். ஒருவர் காப்பாற்ற சென்று தனது கால் ஒன்றையும் இழந்தார். 400 – 500 மனித சங்கிலி.. கைகளில் உடல்கள்.. நோயாளிகள் மேல் நோக்கி கொண்டு வரபட்டனர்.

கயிறு ஒன்றில் தொங்கியபடி, கைகளின் உதவியுடன் கீழே சென்றோம். காப்பற்ற கூடிய அனைவரும் பாதுகாப்பாக மேலே கொண்டு வரபட்டனர். மிகுந்த சிரமத்துடன் நாமும் மேலே வந்தோம்.

தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடுகள் எங்கு போனதென்றே தெரியவில்லை. இனம், மதம் பேதமின்றி மக்களை காப்பாற்ற வேண்டும் என்பது மாத்திரமே நோக்கமாக இருந்தது.

நாட்டிலுள்ள அரசியல்வாதிகளிடம் இனவாதம் மேலோங்கியுள்ளது. எனினும் சாதாரண மக்கள் மத்தியில் அப்படியான எந்த பிரிவினைகளையும் காணவில்லை.

இந்த விபத்தின் போது உண்மையான மக்களின் மனங்களை பார்த்தேன். உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி” என வைத்தியர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கோர விபத்துக்குள்ளான பேருந்தில் கடந்த வாரம் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!! 

பசறையில்..

பசறையில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விபத்துக்குள்ளான குறித்த பேருந்தில் கடந்த வாரம் பயணித்த பயணி ஒருவர் பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

பண்டாரவளை நகரத்தில் குறித்து பேருந்தில் பயணித்த சுப்புன் நலிந்த என்ற இளைஞனே தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,

“கடந்த வாரம் திங்கட்கிழமை காலை 9.20 மணியளவில் பண்டாரவளை நகரில் நான் இதே பேருந்தில் ஏறினேன். ஹப்புத்தளை பகுதியில் இதேபோன்ற வளைவு ஒன்றில் பேருந்து திரும்பியது.

அப்போதும் பள்ளத்தில் விழுவதற்கு நொடி பொழுதில் பேருந்து தப்பியது. பின்னர் பம்பஹின்ன சந்தியில் முன்னால் சென்ற வேனை முந்தி செல்ல இந்த பேருந்து சாரதி முயற்சித்தார்.

இதனால் எதிரில் வந்த மற்றுமொரு பேருந்தில் இந்த பேருந்து மோதப் பார்த்தது. அப்போதும் அதிஷ்டவசமாக பேருந்து பாரிய விபத்தில் இருந்து தப்பியது.

இதன் போது பேருந்தில் இருந்த பெண் ஒருவர் கோபமடைந்து ஏன் இவ்வாறு வாகனம் ஓட்டுவது என நடத்துனரிடம் கேட்டார்.

நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருகின்றேன். வேண்டும் என்றால் இறங்கி வேறு ஒரு பேருந்தில் செல்லுங்கள் என குறித்த பெண்ணிடம் நடத்துனர் கூறினார்.

அதன் பின்னர் பலங்கொட பிரதேசத்தில் வைத்து மற்றுமொரு பேருந்துடன் போட்டி போட்டு பேருந்தை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாவிருந்த நிலையில் மக்கள் சாரதியை கடுமையாக திட்ட ஆரம்பித்தனர்.

அத்துடன் பேருந்தின் உரிமையாளரின் தொலைபேசி இலக்கம் பேருந்திற்குள் எழுதப்பட்டிருந்தது. அதனை தொடர்பு கொண்ட மக்கள், சாரதிகளை உரிய முறையில் வாகனம் ஓட்டுமாறு கூறுங்கள் என கூறியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த சாரதி பேருந்தை மிகவும் மெதுவாக ஓட்டி சென்றார். இரத்தினரபுரியில் இருந்து கொட்டாவை வருவதற்கு 5 மணித்தியாலங்கள் எடுத்துக் கொண்டார்” என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் அதே பேருந்து நேற்றைய தினம் பசறை 13ஆம் மைல் கல்லில் வைத்து 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து : 15 பேர் பலி, 47 பேர் படுகாயம்!!(CCTV காணொளி)

விபத்து..

பதுளை – பசறை 13ஆம் மைல் கல் அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் 47 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பேருந்து 200 அடி பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லுனுகல பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்றே இன்று காலை 7.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 9 ஆண்களும் 5 பெண்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

எதிரே வந்த மற்றுமொரு வாகனத்திற்கு வழி கொடுப்பதற்காக ஓரமாக சென்ற வேளையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.