வாழைச்சேனை கடதாசி ஆலையின் ஊழியர்கள் நீர்த் தாங்கியின் மேல் ஏறி ஆர்ப்பாட்டம்!!

360

வாழைச்சேனை கடதாசி ஆலையின் ஊழியர்களது மூன்று மாத சம்பளம் வழங்கப்படாமை மற்றும் கொழும்பில் இன்று நடைபெற இருந்த உயர் அதிகாரிகளின் கூட்டத்திற்கு செல்ல இருந்தவர்களை தடுக்கும் நோக்கிலும் நேற்று மதியம் 1.30 மணியளவில் இரண்டு ஊழியர்கள் ஆலையின் நீர்த் தாங்கியின் மேல் ஏறி எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலையின் நிறைவேற்றுத் தரத்தில் உள்ள பத்து பேர் இன்று நடைபெற இருந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று கொழும்புக்குச் செல்வதை எதிர்த்து ஆலையில் கடமையாற்றும் இரண்டு ஊழியர்கள் ஆலையின் நீர்த்தாங்கியின் மேல் பகல் 1.00 மணியளவில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட தொழில் திணைக்களத்தின் உதவி தொழில் ஆணையாளர் திருமதி ஜே.திருச்செல்வம் வழங்கிய வாக்குறுதியை அடுத்து நீர்த்தாங்கியில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்த இருவரும் கீழே இறங்கி வந்தனர்.

ஆலையின் பிரதம செயற்படுத்தும் அதிகாரி (C.O) ஒப்பமிட்டு ஆலையில் உள்ள நிறைவேற்றுத் தரத்தில் உள்ள பத்து உறுப்பினர்களை கொழும்புக்கு வருமாறு தொலை நகல் மூலம் அழைப்பு வந்த போது ஊழியர்கள் கொழும்புக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஆலையின் தவிசாளர் ஆலைக்கு வந்து தொழில் சங்கங்களோடு பேசட்டும் என்றும் கூறியதை பொருட்படுத்தாது, நிறைவேற்றுத் தரத்தில் உள்ள அதிகாரிகள் கொழும்புக்குச் செல்வதற்குத் தயாரான நிலையில் இரண்டு ஊழியர்கள் ஆலையின் நீர்த்தாங்கியின் மேல் ஏறி போராட்டத்தைத் தொடர்ந்து இருந்தனர்.

அதன்பின்னர், வாழைச்சேனை பொலிஸார், இராணுவம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தொழில் திணைக்களத்தின் உதவி தொழில் ஆணையாளர் திருமதி ஜே.திருச்செல்வம் ஆகியோர் வருகை தந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட தொழில் திணைக்களத்தின் உதவி தொழில் ஆணையாளர் திருமதி ஜே.திருச்செல்வம் தொழிலாளர்களுடனும் நிறைவேற்றுத் தரத்தில் உள்ள அதிகாரிகளிடமும் பேச்சு வார்த்தை நடாத்தி விட்டு எதிர்வரும் 19ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடதாசி ஆலையின் ஊழியர்களது சம்பளப் பிரச்சினை தொடர்பான கூட்டம் இருப்பதாகவும் அதுவரை கொழும்பில் நடைபெரும் கூட்டம் ஒத்திவைக்கப்படும் என்றும் நீர்த்தாங்கியின் மேல் உள்ளவர்களுடன் தொலைபேசியில் பேசியதற்கிணங்க நீர்த்தாங்கியில் இருந்தவர்கள் பிற்பகல் 04.15 மணியளவில் நீர்த்தாங்கியில் இருந்து இறங்கி வந்தனர்.

v1 v2 v3