இலங்கை அணியின் பிரபல கிரிக்கட் வீரருக்கு நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை!!

855

குசல் மெண்டிஸ்..

இலங்கை கிரிக்கட் அணியின் பிரபல கிரிக்கட் வீரர் குசல் மெண்டிஸிற்கு நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

குசல் மெண்டிஸ் மேற்கொண்ட வாகன விபத்தினால் நபர் ஒருவர் பலியாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த வாகன விபத்து தொடர்பான வழக்கு நேற்று பாணந்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்றின் பொறுப்பில் காணப்பட்ட குசல் மெண்டிஸின் சாரதி அனுமதிப்பத்திரத்தை விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.

பிணைத் தொகை ஒன்றின் அடிப்படையில் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரியிருந்தனர்.

இதன்படி, 50,000 ரூபா பிணைத் தொகையின் அடிப்படையில் சாரதி அனுமதிப்பத்திரத்தை நீதிமன்றம் இன்று விடுவித்தது. எனினும், குசல் மெண்டிஸிற்கு நீதவான் கடுமையாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இருபது மில்லியன் மக்கள் சனத் தொகையைக் கொண்ட இந்த நாட்டில் மிகவும் சொற்ப அளவானவர்களே தேசிய கிரிக்கட் அணியில் இடம்பிடிக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனையவர்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் செயற்படக் கூடாது எனவும், ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டுமெனவும் நீதவான், குசல் மெண்டிஸிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் விபத்து வழக்கிற்கு பிரிம்பாக நட்டஈடு வழக்குத் தாக்கல் செய்து நட்ட ஈடு பெற்றுக்கொள்ள முடியும் என நீதவான் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கை அணியின் சார்பில் விளையாடிய போட்டிகளில் மெண்டிஸ் சோபிக்கத் தவறியதனால் தற்பொழுது நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டித் தொடரில் மெண்டிஸிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.