யாழ்ப்பாணத்தில் வேகமாக பரவும் கோவிட் தொற்று : அரச அதிபர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!!

1217

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்க நிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் தற்போது கோவிட் – 19 அதிகரித்துவரும் நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் அண்மைய காலங்களில் கோவிட் – 19 தொற்று உச்சபட்ச நிலைமையில் காணப்படுகின்றது. மார்ச் மாதத்தில் மாத்திரம் 150 பேருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய காலகட்டமாக காணப்படுகின்றது. பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, அத்தோடு ஏனைய அனைத்து செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றது.
இடர் காலமாக இருக்கின்ற இக் காலப்பகுதியில் மிகவும் அவதானமாக பொதுமக்கள் செயற்பட வேண்டும்.

அதே போல அரச தனியார் மற்றும் ஏனைய நிறுவனங்களும் தங்களுடைய பாதுகாப்பையும் பொது பொது மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் தங்களுடைய செயற்பாடுகளை செயற்படுத்தி கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.

தற்போதைய காலகட்டத்தில் அரசாங்கம் விடுகின்ற அறிவுறுத்தல்கள் அதேபோல சமூக இடைவெளி பேணுதல் முகக் கவசம் அணிதல் போன்றவற்றை பின்பற்றி தங்களையும் தங்களுடைய உறவினர்களையும் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொதுமக்களுக்கு இருக்கின்றது.

போக்குவரத்தின் போதும் ஏனைய செயற்பாடுகளின் போதும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுதல் அவசியமாகும். அத்தோடு அத்தியாவசியமான தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியேறுவதை தவிர்த்தல் சிறந்தது.

பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளை பின்பற்றி செயற்படுதல் வேண்டும். அத்தோடு பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்பும் போதும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அனுப்புதல் சாலச் சிறந்தது.

அத்தோடு பெற்றோர்கள் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் அத்தோடு ஏனைய தரப்பினரும் இந்த விடயங்கள் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும்.

குறிப்பாக திருமண நிகழ்வுகள், மரண வீடுகள் அதேபோன்ற வீட்டில் இடம் பெறும் நிகழ்வுகள், அரச கூட்டங்கள் ஏனைய கூட்டங்களில் பொதுமக்கள் கூடும் போது மிகவும் அவதானமாக சுகாதார நடைமுறைகளை அனுசரித்து பொது சுகாதாரப் பரிசோதகர்களின், பொது வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று செயற்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது.

பொதுமக்கள் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொது மக்களும் அனைத்து தரப்பினரும் இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

யாழ் மாவட்டத்தில் கோவிட் – 19 தொற்றுக்குள்ளாவோரின் தொற்று மூலங்கள் இனங்காணப்படுகிறது. எனவே அது ஒரு சமூக தொற்றாக கருத முடியாது.

ஏற்கனவே சுகாதார வழிகாட்டல்களையும் நடைமுறைகளையும் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளோம். அதேபோல அனைத்து தரப்பினருக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.

எனவே அவற்றை முறையாகப் பின்பற்றி அமுல்படுத்தினால் தொற்று நிலைமையிலிருந்து யாழ்ப்பாண மாவட்ட கட்டுப்படுத்த முடியும். யாழ் மாவட்டத்தில் தற்போதைய நிலைமையானது ஏனைய மாவட்டங்களில் சற்று வித்தியாசமான நிலைமை காணப்பட்டது.

எனவே யாழ்ப்பாண மாவட்டத்தினை கோவிட் – 19 தொற்றிலிருந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றோம். இந்த விடயத்தில் சுகாதார தரப்பினருக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது மக்களுடைய ஒத்துழைப்பு மிக மிக அவசியமான விடயமாகும்.

யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை சகல நடவடிக்கைகளும் வழமைபோன்று இடம்பெறுகின்ற நிலையில் பெரும் தொற்று ஏற்படும் நிலைமையானது மீண்டும் முடகத்தினை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே இது மக்களை அசௌகரியத்தை ஏற்படுத்தும் எனவே தொற்றினை தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பதன் மூலம் முடக்க நிலைமை கட்டுப்படுத்தி தொற்று நிலைமையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.