சுயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத கப்பல் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!!

5236

சுயஸ் கால்வாயில்..

சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள மிகப்பெரிய கப்பலை உடனடியாக நீக்க முடியவில்லை என்றால் அது இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த கொள்கலன் கப்பல் நான்கு கால்பந்து மைதானங்களுக்கு சமமானதாகும்.

இதன் விளைவாக, உலக சந்தையில் எரிபொருள் விலைகள் ஏற்கனவே அதிகரித்து வருவதாகவும், உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

400 மீற்றர் நீளமும் 59 மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் செவ்வாயன்று சீனாவிலிருந்து நெதர்லாந்தின் ரோட்டர்டாம் துறைமுகத்திற்குச் சென்ற போது சூயஸ் கால்வாயின் இரு கரைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது. திடீரென அந்த பகுதியில் ஏற்பட்ட காற்று காரணமாக கப்பல் இவ்வாறு சிக்கியுள்ளது.

தைவானின் எவர்க்ரீன் மெரைன் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி. எவர்கிவன் என்ற இந்த கப்பல் சுமார் 20,000 கொள்கலன்களைக் கொண்டுள்ளதுடன், அது சுமார் 200,000 டன் எடை கொண்டதென தெரிவிக்கப்படுகின்றது.

கால்வாயில் ஏற்பட்ட கப்பல் விபத்து காரணமாக கிட்டத்தட்ட 200 கப்பல்கள் சிக்கித் தவிக்கின்றன, இது கடலில் அண்மையில் ஏற்பட்ட மிகப்பெரிய கப்பல் நெரிசல் என்று கருதப்படுகிறது.