வவுனியாவில் நீரில் மூழ்கி பலியான ஆசிரியருக்கு மாணவர்கள் திரண்டு வந்து அஞ்சலி!!

13926

அஞ்சலி..

வவுனியாவில் ஆலயம் ஒன்றின் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்க சென்ற நிலையில் மரணமடைந்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த ஆசிரியர் 2ஆம் லெப்டினன் ப.பரந்தாமன் (வயது 33) அவர்களுக்கு மாணவர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

வவுனியா, வைரவபுளியங்குளம் குளத்தில் ஆலயத்திற்கு தாமரைப் பூ பறிக்க சென்ற நிலையில் நீரில் மூழ்கி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஆசிரியர் நேற்று (27.03) காலை மரணமடைந்துள்ளார்.

குறித்த ஆசிரியர் ப.பரந்தாமன் அவர்களின் இறுதிக் கிரியைகள் ஆதிவிநாயகர் கோவில் வீதியில் உள்ள அரவது இல்லத்தில் இன்று (28.03) இடம்பெற்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பிரதான நுழைவாயில் வரை எடுத்துச் செல்லப்பட்டு பாடசாலையின் கொடி போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டதுடன்,

மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் கொண்டு செல்லப்பட்டு ஆரம்ப பாடசாலையில் அவரது உடலம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதன்போது கடேற் அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பெருமளவானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து பிரதான வீதி வழியாக தட்சனாங்குளம் இந்து மாயானத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

குறித்த அஞ்சலி நிகழ்வு மற்றும் சடலம் ஊர்வலமாக கொண்டு சென்ற போது பெருமளவானோர் கலந்து கொண்டமையால் ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதிப் போக்குவரத்தும் அரை மணிநேரம் பாதிப்படைந்திருந்தது. இதன்போது போக்குவரத்து பொலிசார் போக்குவரத்து நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் குளத்தில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர், சடலமாக மீட்பு!!

வவுனியா கருமாரி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிப்பதற்காக சென்ற ஆசிரியர் வைரவபுளியங்குளம் குளத்தில் முழ்கி மரணமடைந்துள்ளார்.

இன்று (27.03.2021) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குட்செட் வீதி, கருமாரி அம்மன் ஆலயத்தின் தேர்திருவிழாவிற்கு தாமரைப்பூ மற்றும் தாமரை இலை என்பவற்றை பறிப்பதற்காக ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளத்திற்குள் சென்றுள்ளார்.

குறித்த குளத்தில் தாமரை இலை மற்றும் தாமரை பூவைப் பறித்துக் கொண்டிருந்த போது தாமரைக் கொடியில் சிக்கி நீரில் முழ்கியுள்ளார். குறித்த ஆசியர் குளத்திற்கு சென்ற நிலையில் குளத்தில் நடமாட்டதைக் காணாமையால்,

அயலவர்கள் மற்றும் குறித்த குளத்தின் கமக்கார அமைப்பினர் இணைந்து குளத்தில் தேடிய போது நீரில் முழ்கிய நிலையில் ஆசிரியர் மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட ஆசிரியர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னேரே நீரில் முழ்கியதால் மரணமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஆசிரியரான எஸ்.பரந்தாமன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

இதேவேளை, குறித்த ஆசிரியர் இன்று ஆரம்பிக்கும் கல்விப் பொது சாதரண தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுக்கும் செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது.