வவுனியா வடக்கு ஓடைவெளிக்குளம் 8.8 மில்லியன் ரூபாய் நிதியில் புனரமைப்பு!!

1001

ஓடைவெளிக்குளம்..

ஜனாதிபதியின் நீர்ப்பாசன செழிப்பு திட்டத்தின் கீழ் வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு, ஓடைவெளிக்குளம் 8.8 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் செளபாக்கிய கொள்கையின் கீழ் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘நீர்ப்பாசன செழிப்பு’ எனும் 5000 கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பிரகாரம்,

வவுனியா மாவட்டத்தில் சுமார் 100 குளங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய, வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு, ஓடைவெளிக்குளம் புனரமைப்பிற்கான அங்குராப்பண நிகழ்வு நேற்று (27.03) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த குளப் புனரமைப்பு நடவடிக்கைக்காக 8.8 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் குளத்தின் கீழான நெற்செய்கை நடவடிக்கைளையும் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன்,

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன், மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர், நீர்ப்பாசன பிரதி முகாமையாளர், விவசாய திணைக்கள பொறியியலாளர்கள், வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர், கமநல சேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.