பெரும் ஆபத்தாக மாறிவரும் யாழ்ப்பாணம் கொரோனா கொத்தணி : பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!!

1172

கோவிட் – 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்ட அதிகமான நபர்களுடன் யாழ்ப்பாணக் கொத்தணி தொடர்ந்து வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று காலை நிலவரப்படி மேலும் 17 பேர் கோவிட் – 19 தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தாக, கோவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

நேற்று பகலில் அதிகமான மக்கள் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும், இன்று காலை சரியான எண்ணிக்கை எதிர்பார்க்கப்படுவதாகவும் யாழ்ப்பாண அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகள் வெளிவர இருப்பதாக யாழ்ப்பாண பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் வசிப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாழ்ப்பாணத்தில் 1,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் மேலும் 63 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்திருந்தனர். இதில் சுன்னாகத்தைச் சேர்ந்த 29 பேரும், யாழ்ப்பாண நகரப் பகுதியைச் சேர்ந்த 23 பேரும், கோப்பாயை சேர்ந்த 23 பேரும் அடங்குவதாகக் கூறினர்.

கோவிட் – 19 வைரஸ் வேகமாக பரவி வருவதால் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. யாழ். கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் திங்கள்கிழமை முதல் ஒரு வாரமாக மூடப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் 88 பேர் கோவிட் – 19 வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை 23 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், வியாழக்கிழமை அந்த எண்ணிக்கை 77 ஆகவும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக அறிவிப்பு வரும் வரை திருமணங்கள், கூட்டங்கள் மற்றும் பிற நிகழ்வுகளையும் உள்ளூர் அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் தேவையற்ற நடமாட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.