மறைந்த பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் புகழுடலுக்கு பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி!!

2613

இராயப்பு ஜோசப் ஆண்டகை..

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக மன்னார் ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டகையின் பூதவுடன், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து பேரணியாக மன்னாருக்கு எடுத்துவரப்பட்டது. இதன்போது, மன்னார் மாவட்டம் முழுதும் உள்ள கத்தோலிக்க மக்கள் மட்டுமல்லாது அனைத்து மத மக்களும் இணைந்து வீதிக்கு இரு மருங்கிலும் கருப்புக் கொடிகளை நாட்டி பேரணியில் கலந்துகொண்டனர்.

தேவன் பிட்டிப் பகுதிகளில் இருந்து மக்கள் மலர் தூவி மோட்டார் வண்டிகளிலும் வாகனங்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் மன்னார் ஆயர் இல்லம் வரையில் ஊர்வலமாக ஆயரின் பூதவுடல் எடுத்துவரப்பட்டது.

அத்துடன், ஆயரின் பூதவுடல் மாலை 2.45 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு மக்களினுடைய அஞ்சலிக்காக மன்னார் ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆயரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உட்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள பொது மக்களும் இணைந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணியளவில் பவனியாக அவரது பூதவுடல் ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கம் திங்கட்கிழமை மதியம் இரண்டு மணிவரை பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை மாலை மூன்று மணியளவில் பேராலயத்தில் இறுதித் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். இலங்கையின் அனைத்து ஆயர்களும் இணைந்து ,கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுப்பார்கள். அதனைத் தொடர்ந்து பூதலுடல் குறித்த பேராலயத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.