வவுனியா வைத்தியசாலையில் யாழ் மாநகர மேயர் மணிவண்ணனுக்கு மருத்துவ பரிசோதனை!!

1217

மருத்துவ பரிசோதனை..

யாழ் மாநகர காவல்படையை நியமித்தமை தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுத் துறையினரால் (ரிஐடி) கைது செய்யப்பட்ட யாழ் மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மருத்துவ பரிசோதனைக்காக இன்று (09.04) வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

யாழ் மாநகர எல்லைக்குள் செயற்படும் வகையில் மாநகர காவல்படையை மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கடந்த புதன்கிழமை உருவாக்கியிருந்தார்.

இதனையடுத்து குறித்த காவல்படையின் உடையானது தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளின் காவல்துறையின் உடையை பிரதிபலிப்பதாக தெரிவித்து நேற்று (08.04) இரவு வாக்கு மூலம் பெறுவதற்காக மாநகர மேயர் யாழ் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அங்கு பல மணிநேரம் வாக்குமூலம் பெற்ற பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினிர் (ரிஐடி) மேலதிக விசாரணைகாக அவரை அதிகாலை 2 மணியளவில் வவுனியாவிற்கு அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று (09.04) மதியம் மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் அழைத்து வரப்பட்ட யாழ் மாநகர மேயர் மணிவண்னன், மருத்துவ பரிசோதனையின் பின் மீண்டும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, மாநகர மேயரை சந்திப்பதற்கு வவுனியா பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் அலுவலகத்திற்கு சென்ற பலருக்கும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.