வவுனியா நெளுக்குளம் அஞ்சல் நிலையத்தில் போக்குவரத்து தண்டப்பணம் செலுத்த முடியாத நிலை : சாரதிகள் அவதி!!

1144

நெளுக்குளம் அஞ்சல் நிலையத்தில்..

சிறியளவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்ற சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் மேற்கொள்வதற்கு பதிலாக பொலிஸாரினால் தண்டப்பணம் விதிக்கப்பட்டுகின்றன. பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பத்திரத்தினை எடுத்துச் சென்று அஞ்சல் அலுவலகங்களில் தண்டப்பணம் செலுத்தப்பட வேண்டும்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் அஞ்சல் அலுவலகத்திற்கு தண்டப்பணம் செலுத்த செல்பவர்களை இங்கு தண்டப்பணம் செலுத்த முடியாது எனவும் வவுனியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று தண்டபணத்தினை செலுத்துமாறு பொதுமக்களை நெளுக்குளம் அஞ்சல் அலுவலக அதிகாரி திரும்பியனுப்புகின்றார்.

இதன் காரணமாக நெளுக்குளம் அஞ்சல் அலுவலகத்திலிருந்து சுமார் 5 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வவுனியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று போக்குவரத்து தண்டப்பணத்தினை செலுத்தி மீண்டும் 5கிலோ மீற்றர் தூரம் பயணித்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று சாரதி அனுமதிப்பத்திரத்தினை பெறவேண்டிய நிலமை சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் போக்குவரத்து தண்டப்பணம் செலுத்துவதற்குரிய வசதிகள் காணப்படுகின்ற போதிலும் நெளுக்குளம் அஞ்சல் அலுவலகத்தில் மாத்திரம் போக்குவரத்து தண்டப்பணம் செலுத்த முடியாத நிலைக்கு காரணம் என்ன என்பது தொடர்பில் சாரதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்தினை தொலைபேசியூடாக தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.