வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கூட்டத்தில் நடந்த பிரச்சனைக்கு காரணம் என்ன?

2159

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க பொதுக் கூட்டத்தில் களேபரம் ஏற்படக் காரணம் என்ன என்பதையும், முன்னாள் தலைவரும், நகரசபை உறுப்பினருமான நா.சேனாதிராஜா கடிதம் மூலம் வெளிப்படுத்தியதே நடந்தது எனவும் என சங்கத்தின் முன்னாள் பதில் தலைவர் செ.சபாநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம் நேற்று (11.04) இடம்பெற்ற நிலையில் அங்கு ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் பதில் தலைவராக கடந்த 2020 ஆம் ஆண்டு 3 ஆம் மாதம் முதலாம் திகதியில் இருந்து செயற்பட்டு வருகின்றேன்.

அதன் தலைவர் அகளங்கன் அவர்கள் அவுஸ்ரேலியா சென்று வர முடியாமல் இருப்பதால் நான் பதில் தலைவராக இருந்து பொதுச் சபை கூட்டத்தை கூட்டியிருந்தேன்.

அந்த பொதுச் சபைக் கூட்டம் யாப்பின் அடிப்படையில் உரிய நேரத்தில் நடத்த வேண்டிய தேவை இருந்தது. பதில் தலைவர் பதவி என்பது அங்கீகாரம் உடைய பதவி அல்ல. தலைவருடைய அனுமதி பெற்று செயற்பட வேண்டியுள்ளது.

இந்த நிலையில் இந்த சங்கத்தின் நடவடிக்கைகளை செயலாளர், பொருளாளர், ஆட்சி மன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் கொண்டு சென்றோம்.

கொரோனா நோய் தாக்கம் காரணமாக எமது வருமானங்கள் முடங்கிய நிலையிலும் சிறப்பாக செயற்பட்டோம். தலைவர் லெவளிநாடு சென்ற நிலையில் பொதுச்சபை கூட்டம் நடைபெற்றது.

பதில் தலைவர் என்ற வகையில் நான் ஒரு அறிக்கையை கணக்காய்வுப் புத்தகத்தில் வெளியிட்டேன். அந்த அறிக்கையில் ஒரு குடும்பத்தை நான் பிழையாக சொல்லியிருப்பதாக தெரிவித்து நகரசபை உறுப்பினராக இருக்கும் முன்னாள் தலைவர் சேனாதிராஜாவின் இரண்டு சகோதாரர்களான தர்மராஜா, வில்வராஜா ஆகியோர் கூட்டம் ஆரம்பித்த உடனேயே பல தரப்பட்ட பிரச்சனைகளை எழுப்பி கூட்டத்தை நடத்த விடாது செயற்பட்டனர்.

சபையில் இருந்த பெரியவர்கள் இதில் தலையிட்டு புதிய தலைமை உருவாகட்டும் என்று ஆலோசனை கூறிய பின்னரும் அவர்கள் இருவரும் குழப்பம் விளைவித்து நான் வெளியிட்ட அறிக்கையை நடராஜா மண்டபத்தில் நடராஜா சிலை முன்பாக தீயிட்டு எரித்தார்கள்.

நான் வெளியிட்ட அறிக்கை அனைத்து பொதுச்சபை உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரதும் கோரிக்கை இந்த அறிக்கையை வெளியிடக் கூடாது என்பதே.

நான் குறிப்பிட்ட விடயங்கள் என்னைப் பொறுத்தவரை எமது சமய, சமூக விழுமியங்களை மீறியதாக இருக்கவில்லை. நான் 14 மாதங்கள் பதில் தலைவராக இருந்த போது அனுபவ ரீதியாக பெற்ற விடயங்களையே எழுதியுள்ளேன்.

முன்னாள் தலைவர் சேனாதிராஜா அவர்கள் ஒரு கடிதம் எழுதினார். தலைவர் அகளங்கன் வரும் வரை கூட்டம் நடத்த வேண்டாம் எனவும் அவ்வாறு நடத்தினால் வேறு பிரச்சனை வரும் எனவும் கடிதம் எழுதினார்.

அந்த காலத்தில் இருந்து அவர்கள் திட்டமிட்டு தனது ஏனைய சகோதரர்களை வைத்து இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். ஒரு சமய நிறுவனம் நடராஜா சிலை முன்னால் அந்த ஆண்டின் அறிக்கையை எரிப்பது மிகவும் பிழையான விடயம்.

இந்த அறிக்கையில் உள்ள எனது தகவல் யாருக்கும் மனவருத்தத்தை தந்தால் நான் அதற்கு மன்னிப்பு கேட்கிறேன் எனக் கூட்டத்தில் தெரிவித்த போதும், அவர்கள் என்னை கூட்டத்தை நடத்த விடாது தீயிட்டு எரித்துள்ளார்கள்.

தீயிட்டு எரித்த அதே தியாகராஜாவை துணைத்தலைவராக தெரிவு செய்துள்ளார்கள். இந்த சங்கம் எங்கே பயணிக்க போகிறது. நிறைந்த தீ வைப்பு சம்பவங்களுக்கு அடித்தளம் இட்டுள்ளார்கள். இந்த சங்கம் இளைஞர்களுக்குரியது என்ற பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கின்றது. இருந்தும் முதியவர்கள் இதை நடத்த வேண்டும் என பொதுச்சபை கூறுகிறது.

25 வருடங்களுக்கு மேலாக சேனாதிராஜா அவர்களே தலைவராக இருந்துள்ளார். அதன் பின் அவரது தம்பி அகளங்கன் 3 வருடங்களை கடந்து தலைவராக இருந்துள்ளார்.

இந்த நிலையில் இவர்கள் நடந்து கொண்ட விதம் எனது மனதை புண்படுத்தியதை விட இந்து சமூகம் என்ற சமூகத்தை இவர்கள் புண்படுத்ததியுள்ளார்கள்.

நான் தனிப்பட்ட ரீதியில் அறிக்கை வெளியிடவில்லை. ஒரு கூட்டு நிறுவனம் என்ற அடிப்படையில் தான் வெளியிட்டுள்ளேன். பிழை சரிகளை பேசலாம். ஆனால் தீயிட்டு எரிப்பதை ஏற்க முடியாது.

மீண்டும் அவரை துணை தலைவராக தெரிவு செய்தது ஏற்க முடியாது. அவரது உறவினர் ஒரு சபையை சேர்ந்தவர். அவர் கூட சண்டைக்கு வந்தார். இந்த சம்பவங்களை பொதுச்சபை அங்கீகரிக்கின்றதா?.

துணைத் தலைவரை புதிய தலைவராகிய பத்தமநாதன் சத்தியநாதன் ஏற்றுக் கொள்கின்றாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.