வவுனியா நகரில் அதிகரித்த மக்கள் கூட்டத்தையடுத்து சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் விசேட நடவடிக்கை!!

948

வவுனியா நகரில்..

புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் பொருட் கொள்வனவுக்காக அதிகளவிலான மக்கள் வருகை தந்தையடுத்து சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து சுகாதார நடைமுறைகளை கண்காணிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

தமிழ் – சிங்கள புதுவருடமானது நாளை பிறக்கவுள்ள நிலையில் புத்தாடைகள், பட்டாசுகள், மரக்கறிகள், இனிப்பு வகைகள் என்பவற்றை கொள்வனவு செய்வதற்காக வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் வருவதனால் நகரில் சன நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றது.

வர்த்தக நிலையங்களில் அதிகரித்த மக்கள் கூட்டத்தையும் அவதானிக்க முடிகிறது. இதனையடுத்து கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் வகையில்,

சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார பரிசோதகர்கள் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் வழங்கி வருவதுடன், சுகாதார நடைமுஐறகளை கண்காணித்தும் வருகின்றனர்.

அத்துடன், பொலிசாரும் சுகாதார நடைமுறைகளைக் கண்காணிப்பதுடன் முகக் கவசம் அணியாது வருபவர்களை மறித்து முககவசத்தை அணியுமாறு வலியுறுத்துவதுடன், அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களில் முககவசம் அணியாத 200 இற்கும் மேற்பட்டவர்களுக்கு வவுனியா பொலிசாரால் எச்சரிக்கை வழங்கப்பட்டு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.