காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் சீமான்!!

552

Seeman

இந்தியப் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடப்பதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

தமிழகத்தில் சென்டி மென்ட் தொகுதியாக கருதப்படும் கன்னியாகுமரியில் இருந்து பிரசாரத்தை தொடங்குவதில் அரசியல் கட்சி தலைவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா கடந்த 9ம் திகதி நாகர்கோவிலில் பிரசாரம் செய்து அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

இன்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டத்தில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதையடுத்து எதிர்வரும் 21ம் திகதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்து கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் குமரி மாவட்டத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் துரோகம் இழைத்ததாக கூறி கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது சீமான் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக பிரசாரம் செய்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது பாராளுமன்ற தேர்தலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ள சீமான் இம்மாத இறுதியில் தேர்தல் பிரசாரத்தை குமரி மாவட்டம் ஆற்றூரில் இருந்து தொடங்குகிறார்.

கடந்த மாதம் சென்னையில் காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கடந்த 1ம் திகதி திருவட்டார் அருகே உள்ள ஆற்றூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடக்க இருந்த பொதுக் கூட்டத்திற்கு எதிராக காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டதோடு பொதுக்கூட்ட மேடையையும் சூறையாடினர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ஜான்ஜேக்கப் உள்ளிட்ட 200 காங்கிரசார் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் எம்.எல்.ஏ.க்களை கைது செய்யக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெற்றன.

மேலும், கடந்த 1ம் திகதி நடக்க இருந்த பொதுக் கூட்டத்திற்கு பதிலாக விரைவில் ஆற்றூரில் மீண்டும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும், அதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்வார் என்றும் திருவட்டார் ஒன்றிய நிர்வாகிகள் கூறியிருந்தனர்.

அதன்படி இம்மாத இறுதியில் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த பொதுக்கூட்டம் சீமானின் தேர்தல் பிரசார தொடக்க கூட்டமாக இருக்கும் என கட்சி நிர்வாகிகள் கூறினர்.

சீமான் வருகையை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் திருவட்டார் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் ஆற்றூரில் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஜான்சிலின் சேவியர் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் தென் மண்டல பொறுப்பாளர் சிவகுமார் கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது..

தமிழகம் முழுவதும் காங்கிரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்ய உள்ளார். இந்த பிரசார பயணத்தை குமரி மாவட்டம் ஆற்றூரில் இருந்து தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நாள், நேரம் வருகிற 17ம் திகதி நாங்குநேரியில் நடைபெறும் தென்மண்டல கலந்தாய்வு கூட்டத்தில் சீமான் அறிவிப்பார் என்று அவர் கூறினார்.