ரஜினியைச் சந்தித்த அழகிரி : சூடு பிடிக்கின்றது அரசியல் மேடை!!

262

Rajani-Alagiri

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலருமான மு.க.அழகிரி இன்று காலை திடீரென போயஸ் தோட்டத்துக்கு வந்திருந்தார். அவர் தனது மகன் துரை தயாநிதியுடன் நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்குள் சென்றார். இன்று காலை 10.20க்கு வந்த அவர், மகனுடன் தனியாகச் சென்று சந்தித்தார்.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை திடீர் என சந்தித்து மு.க.அழகிரி பேசியுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் சிலரையும் அவர் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சில நாட்களுக்கு முன்னர் அவர் மதிமுக பொதுச் செயலர் வைகோவையும் சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் கட்சியை விட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தபோதும் மதுரை மற்றும் தென்னக திமுக பிரமுகர்களை இன்னும் தொடர்பில் வைத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், அரசியல் வானில் தான் இன்னும் துடிப்பாக இருக்கிறோம் என்பதை உலகுக்குக் காட்ட, தடபுடல் பிறந்த நாள் விழா, அரசியல் பிரமுகர்களைச் சந்திப்பது, தொண்டர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என தன் அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து வரும் அழகிரி, அடுத்து என்ன வியூகம் வகுக்கப் போகிறார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

எனினும் ரஜினியை சந்தித்துவிட்டு வெளியே வந்த மு.க. அழகிரி, செய்தியாளரிடம் பேசியபோது, ரஜினிகாந்த் எனது நீண்ட கால நண்பர். அவரை சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்து சொல்லவே வந்தேன். என் மகன் நடிக்கும் அடுத்த படம் தொடர்பாக பேசிவிட்டு, அவரது ஆசியைக் கோரினேன்.

ரஜினியின் கோச்சடையான் பட பாடல்களைக் கேட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. கவிஞர் வைரமுத்துவின் பாடலும், ரஜினி பாடிய விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனைச் சொல்லி, அவரிடம் பாராட்டினேன். மற்றபடி வேறு எந்த அரசியல் பேச்சும் அவரிடம் பேசவில்லை என்று கூறினார்.

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உள்பட பாஜக தலைவர்கள், பிரமுகர்களையும் மு.க.அழகிரி சந்தித்துப் பேசியுள்ளார். பாஜகவுக்கு தமிழகத்தில் ஆதரவு திரட்டவும், ஒருங்கிணைக்கவும் மு.க.அழகிரியை அவர்கள் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரிக்கு போட்டியிட வாய்ப்பு தருவதாகவும் கூறப்பட்டதாம். ஆனால் அதை அழகிரி மறுத்துவிட்டார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிகின்றன.