திமுக ஒரு மண்குதிரை, நம்பினால் கரையேற முடியாது : விந்தியா அதிரடி பேச்சு!!

508


Vinthiya

திமுகவை நம்பி கரையிரங்கினால் கரைசேர முடியாது என்று நடிகை விந்தியா கூறியுள்ளார். நடிகை விந்தியா 2006ம் ஆண்டிலிருந்து, அதிமுகவிற்காக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.



நான்கு தேர்தல்களில் பிரசாரம் செய்த அனுபவம் தனக்கு உண்டு என பெருமை அடிக்கும் விந்தியா வரும் லோக்சபா தேர்தல் பிரசாரம் குறித்து கூறியதாவது, கூட்டணி அமைத்தால், அதிமுகவை தோற்கடித்து விடலாம் என கருணாநிதி அலைகிறார்.

திமுக சார்பில் 35 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதை பார்த்தேன். யார் இந்த வேட்பாளர்கள் என, மக்கள் பார்வைக்கு செல்வதற்கு உள்ளாக திமுகவிற்கு மக்கள் நலத்தைவிட, பணம் தான் முக்கியம் என்பது அழகிரியின் பேட்டியால் வெட்ட வெளிச்சமாகி விட்டது.



திமுக வேட்பாளர்கள் எல்லாம், வேட்பாளராக நிறைய பணம் கொடுத்துள்ளனர். கருணாநிதியின் மகன் அழகிரியே, அந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.



இப்படிப்பட்டவர்களை மக்கள் தேர்வு செய்தால் தமிழகம் உருப்படுமா சொல்லுங்கள். தமிழகத்திற்கு ஏற்றம் தேவை, மத்தியில் மாற்றம் தேவை. மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய காலம் போய், கட்டளை இடும் நேரம் வரவேண்டும்.


கருணாநிதி குடும்பத்திற்காக அரசியல் நடத்துகிறார். ஜெயலலிதா மக்களை தன் குடும்பமாக நினைத்து அரசியல் செய்கிறார். கச்சத்தீவு பிரச்னை, மீனவர்கள் பிரச்னையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. கச்சத் தீவை ஜெயலலிதாவால் மட்டுமே மீட்க முடியும்.

பாரம்பரிய கட்சி என கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கூட்டணி அமைக்க, “லோ லோ’ன்னு அலைவது, அதன் தமிழக பெருமையை பறைசாற்றுகிறது. தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா செய்துள்ள நன்மைகளை சொல்லி பிரசாரம் செய்வோம்.


திமுகவினர், 2ஜி ஊழல் மட்டுமல்ல, பல ஊழல்கள் செய்து உள்ள எங்களை காப்பாத்துங்கள் என்றுதான் பிரசாரம் செய்ய நேரிடும். ஊழலை ஒழிக்க களமிறங்கியதாக கூறும், ஆம் ஆத்மி கட்சி, ஊழல் எப்படி நடக்கிறது என ஊழலில் அனுபவப்பட்ட திமுகவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மோடி எளிமையானவர், நல்லபடியாக டீ கடை நடத்தியவர் என கூறும், பாஜவினர், தண்ணி வண்டியுடன் கூட்டணி வைத்தால் தேற முடியுமா. பாலில் தண்ணி அதிகமாக கலந்தால், பாலும் தரமில்லாததாகி, டீ கழனி தண்ணி ஆகிவிடும்.

மேலும் ஊழல்களில் மலிந்துள்ள திமுக மண்குதிரை நிலையில் உள்ளது. இதை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள், கரையேற முடியுமா சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.