வவுனியாவில் றிசாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்!!

1322

கவனயீர்ப்பு போராட்டம்..

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் இன்று (28.04) காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனின் கைது ஒரு அரசியல் பழிவாங்கல் எனவும், றிசாட் பதியதீன், அசாத்சாலி உள்ளிட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் குறித்த போராட்டம் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘அரசுக்கு ஆதரவு வழங்காததற்காக இந்த கைதா, சிறுபான்மை தலைமைகளை விடுதலை செய், அரசே உண்மையான சூத்திரதாரிகளை கைது செய், தமிழ் பேசும் உறவுகளே அநீதியான கைதுதுக்கு எதிராக ஒருமித்து குரல் கொடுப்போம்,

இன மத பாகுபாடு இன்றி பணியாற்றிய சேவகனை விடுதலை செய், றிசாட் பதியுதீன்- அசாத் சாலி-ஹிஸ்புல்லா- ரிஜாஜ் பதியுதீன் அடுத்தது யார்?, சிறுபான்மையினரின் குரலை விடுதலை செய், ரிசாட்டின் கைது யாரை திருப்தி படுத்த’ என எழுத்தப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன்,

வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், விடுதலை செய் விடுதலை செய் றிசாட்டை விடுதலை செய் என கோசமும் எழுப்பியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, லரீப், ரி.கே.இராஜலிங்கம், மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.