மீண்டும் சிக்கலில் தேவயானி!!

576

Devyaniஇந்தியாவின் நியூயோர்க் நகரில் துணைத்தூதராக இருந்த தேவயானி கோபர்கடே மீது ஏற்கனவே தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அமெரிக்க நீதிமன்றத்தில் அவர் மீது இன்று மீண்டும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இந்திய துணைத்தூதராக தேவயானி கோபர்கடே இருந்தார். போலி ஆவணங்கள் கொடுத்து வேலைக்காரிக்கு விசா பெற்றதாக அமெரிக்க பொலிசார் குற்றம் சாட்டி கடந்த டிசம்பர் மாதம் 12ம் திகதி இவரை கைது செய்தனர்.

குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு காரில் திரும்பிய போது தேவயானியை நடு வீதியில் வைத்து கைது செய்தனர். பின்னர் பொலிஸ் நிலையத்தில் ஆடைகளை களைந்து சோதனை செய்து அடைக்கப்பட்டார்.

தூதர் அந்தஸ்தில் இருந்த அவரை அமெரிக்கா அவமரியாதை செய்ததாக இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்தது. ஆனால் இந்தியாவின் எந்த கோரிக்கையையும் ஏற்க மறுத்த அமெரிக்க பொலிசாரும், அதிகாரிகளும் பிடிவாதம் பிடித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அத்துடன் அவரை விசா மோசடி குற்றவாளி பட்டியலில் சேர்த்து நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டது. இதைடுத்து தேவயானி ஜனவரி 9ம் திகதி இந்தியா திரும்பினார்.

இந்தப் பிரச்சினையால் இந்தியா– அமெரிக்கா இடையேயான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே அமெரிக்க நீதிமன்றத்தில் தேவயானி மீதான விசா மோசடி வழக்கு விசாரணை நடந்து வந்தது. அதில் வக்கீல்கள் வாதம் முடிந்து கடந்த 12ம் திகதி தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது தேவயானி மீதான விசா மோசடி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அமெரிக்க மாவட்ட நீதிபதி ஷிரா செச்சின்ட்லின் தனது 14 பக்க தீர்ப்பில், இது ஒரு பிரச்சினையே இல்லை. அவர் கைது செய்யப்பட்ட போது முழு தூதர் தகுதியுடன்தான் இருந்தார் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தேவயானி மீது புதிய குற்றச்சாட்டுகள் மன்ஹட்டன் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகளிடம் உண்மையை மறைத்து பொய்யான தகவல்களை அளித்து வேலைக்காரிக்கு விசா பெற்றது, அமெரிக்க சட்டங்களுக்கு உட்பட்டு அவருக்கு சம்பளம் வழங்காதது, போதுமான பாதுகாப்பு அளிக்காதது தொடர்பாக 21 பக்கங்கள் அடங்கிய குற்றச்சாட்டுகள் தேவயானி மீது சுமத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க அரசின் சார்பில் இந்திய வம்சாவழியை சேர்ந்த அரசு தரப்பு வக்கீல் ப்ரீத் பராரா இந்த குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.