தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 3 முக்கிய நடிகர்கள் மீது வழக்கு!!

577

Act

தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக நடிகர்கள் ராமராஜன், வையாபுரி, தியாகு ஆகியோர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து நடிகர் ராமராஜன் வியாழக்கிழமை இரவு கடையம் யூனியனுக்கு உட்பட்ட வடமலைப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது, அவர் தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெறாமல், தேர்தல் விதிகளை மீறி வேனில் ஒலிபெருக்கி வைத்து பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஆலங்குளம் தொகுதி பறக்கும் படை தாசில்தார் சந்திரசேகர் கடையம் பொலிஸில் புகார் செய்தார். இதன்பேரில் நடிகர் ராமராஜன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அருவேல்ராஜ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் முருகேசன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதேபோன்று தூத்துக்குடி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசிங்கை ஆதரித்து நடிகர்கள் தியாகு, வையாபுரி ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

அப்போது உரிய அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக தென்பாகம் பொலிஸார், நடிகர் வையாபுரி, தூத்துக்குடி பெருநகர அ.தி.மு.க. செயலாளர் ஏசாதுரை, கவுன்சிலர்கள் தனராஜ், ஜெயக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோன்று மத்திய பாகம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்ததாக நடிகர் தியாகு, ஏசாதுரை, ராஜசேகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.