வவுனியாவில் சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்திய ஹோட்டல் தனிமைப்படுத்தப்பட்டது!!

2336


ஹோட்டல்..


வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்திய ஹோட்டல் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு கடமையாற்றிய 5 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என பிராந்திய சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ரி.தியாகலிங்கம் தெரிவித்தார்.இன்று (01.05) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் 19 தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பரிசோதகர்கள் கடந்த ஒருவாரமாக தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை (29.04) வவுனியா நகரப்பகுதியில் உள்ள உணவகங்கள் சுகாதார பிரிவினரால் சோதனை செய்யப்பட்டதுடன், அங்கு பின்பற்றப்படுகின்ற சுகாதார நடைமுறைகள் மற்றும் முகக்கவசம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.


இதன்போது சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத மற்றும் முகக்கவசம் அணியாது வர்த்தக நிலையங்களில் கடமையாற்றியோர் என 100 பேருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு, சுகாதார பணிமனைக்கு குறித்த உணவகங்களைச் சேர்ந்தோர் அழைக்கப்பட்டு அவர்களுக்கு சுகாதார அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.

ஆனாலும் குறித்த செயற்பாட்டுக்கு வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்று ஒத்துழைப்பு வழங்கவில்லை. இந்நிலையில் இன்றைய தினம் (01.05) பொது சுகாதார பரிசோதர்கள் மற்றும் பொலிசார் அடங்கிய குழுவினர் குறித்த ஹோட்டலுக்கு சென்று அவர்களது சுகாதார நடைமுறைகள் முககவசம் என்பவன தொடர்பில் பரிசீலித்ததுடன், சுகாதார பணிமைனைக்கு வராமைக்குரிய காரணம் தொடர்பிலும் விளக்கம் கோரப்பட்டது.

இதன்போது குறித்த ஹோட்டலில் கடமையாற்றி சிலர் அன்டிஜன் அல்லது பிசீஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாது கடமையாற்றியமை தெரியவந்ததுடன், அவர்களை பீசீஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் குறித்த ஹோட்டலை திறக்குமாறு கோரினோம்.

இதன்போது சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு ஒத்துழைக்காது அவர்கள் குழப்பம் விளைவித்து சோடா போத்தல் ஒன்றினால் சுகாதார பரிசோதகர்கள் மீது தா.க்.கு.த.ல் மேற்கொள்ள முயற்சி எடுக்கப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக பொலிசார் தலையிட்டு, மேலதிக பொலிசாரை வரவழைத்து குறித்த ஹோட்டலை சுய தனிமைப்படுத்தியதுடன், அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 5 பேரை வவுனியா பொலிஸ் நிலையம் அழைத்து சென்று அவர்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.