ஐபிஎல் 2021 போட்டிகள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டது!!

970


ஐபிஎல் 2021..



இந்தியாவில் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த ஐபிஎல் 2021 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.



கடந்த ஏப்ரல் 9-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்கியது 2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல்.




29 போட்டிகள் வரை விளையாடப்பட்ட இந்த போட்டியில் 8-ல் 6 போட்டிகளில் வென்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தில் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் 7-ல் 5 போட்டிகளில் வென்று இரண்டாவது இடத்திலும், 7-ல் 5 போட்டிகளில் வென்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.


30-வது போட்டியாக, மே 03-ம் தேதி திங்கட்கிழமை, அஹ்மதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில் நடக்க வேண்டிய போட்டி நடைபெறவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கொல்கத்தா மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒத்தி வைக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின. அதனைத் தொடர்ந்து போட்டியை தொடர்ந்து நடத்துவது குறித்து விவாதங்கள் எழுந்தன.

தற்போது அதிகாரபூர்வமாக ஐபிஎல் அமைப்பு, இந்த 2021 ஆண்டுக்கான போட்டிகளை காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதை ஏஎன்ஐ முகமை அதன் ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறது.


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 3.5 லட்சத்துக்கு மேல் சென்று கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் நாள் ஒன்றுக்கு சுமார் 3,000-த்தை கடந்து பதிவாகி வருகிறது.

இந்த நெருக்கடியான சூழலில் ஐபிஎல் தேவை தானா? என சர்ச்சை எழுந்தது. பேட் கம்மின்ஸ், ஷிகர் தவான், உனத்கட் என பல்வேறு ஐபிஎல் வீரர்களும் கொரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிக்க இந்திய அரசுக்கு பல வகையில் பல வித நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

இந்தியாவின் பல நகரங்களில் போதுமான ஆக்சிஜன் விநியோகம், மருந்து விநியோகம் இல்லை என்கிற செய்திகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

இப்படி கொரோனா அதிதீவிரமாக பரவுவதாலும், ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு மத்தியில் கொரோனா பரவத் தொடங்கி இருப்பதாலும் ஐபிஎல் 2021 காலவரையின்றி நிறுத்திவைக்கப்படுவதாக பிபிசி செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

வீரர்கள், பொதுமக்கள், மைதான களத்தில் பணியாற்றும் ஊழியர்கள், போட்டிகளில் பணியாற்றும் அலுவலர்கள் என ஒவ்வொருவரின் பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை. அதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ஜெய் ஷா ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.