வவுனியா வைத்தியசாலையில் இனி சிறந்த மருத்துவ சேவை : வைத்திய அத்தியட்சகர்!!

338

Vavuniya

வவுனியா வைத்தியசாலையில் இனி வரும் காலங்களில் எவ்வித சிரமமும் இன்றி சிறந்த மருத்துவ சேவையை வழங்க முடியும் என வவுனியா பொது வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்திய கலாநிதி குலலிங்கம் அகிலேந்திரன் தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலைக்கு தானியங்கி மின் பிறப்பாக்கி வட மாகாண சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ சேவைகளின் இனி வரும் காலங்களில் இடர்பாடுகள் ஏற்படுமா என வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எமது வைத்தியசாலை பொது வைத்தியசாலையாக உள்ள போதிலும் மின்சார தடை ஏற்படும் போது சிகிச்சைகள் வழங்குவதில் பல இடர்பாடுகளையும் பெறுமதி மிக்க மருத்துவ உபகரணங்களின் இழப்புகளையும் எதிர்கொண்டிருந்தோம்.

இதனை கருத்தில் கொண்டு எமது வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியதன் அடிப்படையில் வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் வைத்தியசாலையின் தேவையை கருத்தில் கொண்டு எமக்கு சுமார் 43 இலட்சம் ரூபா பெறுமதியான தானியங்கி மின்பிறப்பாக்கியை அமைச்சின் ஊடாக வழங்கியுள்ளார்.

இம் மின் பிறப்பாக்கி தற்போது செயற்பட தொடங்கியுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் வட மாகாணத்தில் சிறந்த மருத்துவ சேவையை எமது வவுனியா பொது வைத்தியசாலையின் ஊடாக வழங்க முடியும் என தெரிவித்தார்.