நகரசபை..

வவுனியா நகரில் உள்ள குப்பைகளை தரம் பிரிக்காது உடனடியாக அகற்றி நகரின் தூய்மையைப் பேண சபை அனுமதி வழங்கியுள்ளதாக நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபையின் கழிவகற்றல் முறையில் ஏற்பட்ட சிக்கல் நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்கிய போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

வவுனியாவில் தரம் பிரித்து குப்பைகளை அகற்றுவதற்கு நகரசபை நடவடிக்கை எடுத்திருந்தது. இந்நிலையில் வர்த்தகர்கள், பொதுமக்கள் தரம் பிரித்து கழிவுகளை சரியான முறையில் வழங்காமையினால் அதனை அகற்றுவதில் இழுபறி நிலை காணப்பட்டது.

இதனால் வவுனியா நகரசபைக்குட்பட்ட பல பகுதிகளில் சில நாட்களாக குப்பைகள் அகற்றப்படாது காணப்பட்டது. இந்நிலையில் நகரசபையின் சுகாதாரக் குழுவின் கவனத்திற்கு இவ் விடயம் கொண்டு வரப்பட்டு இது தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.

இதன்போது நகரசபை சுகாதாரக் குழு தற்போதைக்கு தரம் பிரிக்காது நகரின் குப்பைகளை அகற்றி நகரை தூய்மைப்படுத்த வேண்டும் என நகரசபை உப தவிசாளர் சு.குமாரசாமி தெரிவித்தார்.

இதனடிப்படையில் நேற்று (12.05) இடம்பெற்ற சபை அமர்வில் குறித்த விடயத்தை நான் முன்வைத்து சபை உறுப்பினர்கள் மற்றும் நகரசபை செயலாளர் ஆகியோர் அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

இதனையடுத்து வவுனியாவில் குப்பை அகற்றுவது தொடர்பில் காணப்பட்ட இழுபறி நிலைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. உடனடியாக குப்பைகளை தரம் பிரிக்காது அகற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என நகரசபையினர் மேலும் தெரிவித்தார்.





