ஆக்ஸிஜன் உதவியுடன் இசையை ரசித்த வைரல் பெண் : பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

22703

இந்தியாவில்..

மருத்துவரிடம் பாடலை இசைக்கும்படி கேட்டு படுக்கையில் அமர்ந்தபடியே கால்களை மட்டும் அசைத்து அதை ரசித்தபடியிருந்தார். இதனை வீடியோவாக எடுத்த மருத்துவர் அதனை தன் ட்விட்டர் பக்கத்தில், ‘இவர் மிகவும் வலிமையான பெண், ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.

டெல்லியை சேர்ந்த மருத்துவர் மோனிகா லங்கே, சில நாள்களுக்கு முன் தன் சமூகவலைதள பக்கத்தில் பாசிட்டிவிட்டியின் உதாரணமாகப் பதிவிட்டிருந்த, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பெண், நேற்று உயிரிழந்த செய்தி, தற்போது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சில நாள்களுக்கு முன்னர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்திருந்த நிலையில் மருத்துவரிடம் பாடலை இசைக்கச் சொல்லி தன்னுடைய படுக்கையில் உட்கார்ந்த நிலையில் இசையை ரசித்த காணொளியை மருத்துவர் வெளியிட்டிருந்தார்.

டெல்லியை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

கொரோனா பாதிப்பால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த பாதிப்பிலிருந்து மீண்டு விடுவோம் என்ற உறுதியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும், தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை கிடைக்கவில்லை. இதனால் கொரோனா நோயாளிகளுக்கான சாதாரண பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு செயற்கையாக ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வந்தது. மேலும் பிளாஸ்மா தெரபியும், ரெம்டெசிவிர் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.

அந்நிலையில்தான் மருத்துவரிடம் பாடலை இசைக்கும்படி கேட்டு படுக்கையில் அமர்ந்தபடியே கால்களை மட்டும் அசைத்தபடி பாட்டை ரசித்துக்கொண்டிருந்தார். இதனை வீடியோவாக எடுத்த மருத்துவர் அதனை தன் ட்விட்டர் பக்கத்தில், `இவர் மிகவும் வலிமையான பெண், ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.

பதிவிட்ட இரண்டு நாள்களில் அந்தப் பெண்ணுக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் இடம் கிடைத்ததையும் அந்த மருத்துவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அந்த பெண்ணுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என வேண்டுகோளும் விடுத்திருந்தார்.

அந்தப் பெண்ணிற்கு தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை கிடைத்துவிட்டது. ஆனால் அவரின் உடல்நிலை சீராக இல்லை. அந்த தைரியமான பெண்ணுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். எல்லாமே இறைவன் கைகளில்தான் உள்ளது.

ஒரு சின்னஞ்சிறிய குழந்தை அவருக்காக வீட்டில் காத்திருக்கிறது. தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்” என உருக்கமாக மருத்துவர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், அப்பெண் நேற்று இரவு இறந்துவிட்டதாக மருத்துவர் மோனிகா லங்கே மிகுந்த வருத்தத்துடன் பதிவிட்டார். “நான் மிகவும் துக்கத்தில் உள்ளேன். மிகவும் தைரியமான ஓர் ஆன்மாவை நாம் இழந்துவிடோம்.

அவரின் குடும்பத்துக்கும் குழந்தைக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் பலரையும் இந்தப் பதிவு கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.