பருவமழைக் குறைவால் சிறுபோகம் பாதிக்கப்படும் நிலை!!

1525

varatchi

இலங்கையில் இந்த ஆண்டுக்கான பருவமழை குறைந்ததன் காரணமாக குளங்கள் மற்றும் ஆறுகளை நம்பிப் பயிரிடும் சிறுபோக நெல் வேளாண்மைச் செய்கை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலையும் வெளியிட்டுள்ளார்கள்.

பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பெய்யவேண்டிய பருவமழை இன்னமும் பெய்யாத நிலையில் அநேகமான பிரதேசங்களில் வறட்சி நிலை காணப்படுகின்றது.

மழை இல்லாத நிலையில் விவசாய நீர்ப்பாசனக் குளங்களிலும் நீர்த் தேக்கங்களிலும் நீர் மட்டமும் குறைந்து வருகின்றது.

நாட்டின் தற்போதைய வறட்சி நிலையை நீக்க அரசாங்கத்தின் வேண்டுகோளின்பேரில் மழை வேண்டி பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டுக்கான பருவமழைக் குறைவு காரணமாக சிறுபோக நெல் வேளாண்மைச் செய்கையை மட்டுப்படுத்துமாறு நீர்ப்பாசன இலாகாவினால் விவசாயிகளுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தங்களது வேளாண்மைச் செய்கையில் விதிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இந்த மாவட்டத்தில் சிறுபோகச் செய்கைக்கு அடையாளம் காணப்பட்டுள்ள 60, 000 ஏக்கரில் இந்த ஆண்டு 17, 500 ஏக்கரில் மாத்திரம் நெற் பயிரிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார் மட்டக்களப்பு மாவட்ட கமத்தொழில் சேவைகள் உதவி ஆணையாளர் என். சிவலிங்கம்.

-பிபிசி தமிழ்-