வவுனியாவில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் மரணம் : இன்று இரண்டாவது மரணம்!!

2926

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக 40 வயதுடைய மேலும் ஒருவர் இன்று (22.05) இரவு மரணமடைந்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.



வவுனியா, கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். இதன்மூலம் வவுனியாவில் கொரோனா காரணமாக இன்று இரண்டாவது நபர் மரணமடைந்துள்ளார்.

இதேவேளை, கொரோனா மூன்றாவது அலையின் காரணமாக வவுனியாவில் இடம்பெற்ற ஐந்தாவது மரணம் இது என்பதும், வவுனியா வைத்தியசாலையில் இடம்பெறும் நான்காவது கொரோனா மரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் மரணம்!!

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் இன்று (22.05) மாலை மரணமடைந்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கொரோனா,

சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். வவுனியா, கிடாச்சூரி பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

இதேவேளை கொரோனா மூன்றாவது அலையின் காரணமாக வவுனியாவில் இடம்பெற்ற நான்காவது மரணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்றைய செய்தி : வவுனியாவை உலுக்கும் கொரோனா மூன்றாவது அலை : 654 பேருக்கு தொற்று, 3 பேர் மரணம்!!

கொரோனா தாக்கத்தின் மூன்றாவது அலையில் வவுனியா மாவட்டத்தில் 654 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 3 பேர் மரணித்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் தற்போதைய கொரோனா தாக்கத்தின் நிலமைகள் தொடர்பாக மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இன்று (21.05) இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தாக்கத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், அதனை கட்டுப்படுத்த முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் நடைமுறையில் வரும் பயணத்தடையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

தற்போது நோய் பரவும் வேகம் கூடுதலாக உள்ளது. மூன்றாவது அலையின் காரணமாக வவுனியாவில் 654 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 3 பேர் மரணித்துள்ளனர்.

எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பும் அவசியம் எனத் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன், பிரதி சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மு.மகேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம்,

வன்னிப் படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கேமந்த பண்டார, சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் திஸால் லாடி சில்வா, சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.