வவுனியா மற்றும் கிளிநொச்சியில் கொரோனாவால் பலியான மூவரின் உடல்கள் பூந்தோட்டம் மயானத்தில் தகனம்!!

1603

கொரோனாவால்…

வவுனியா மற்றும் கிளிநொச்சியில் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த மூன்று பேரின் உடல்கள் வவுனியா, பூந்தோட்டத்தில் உள்ள மின்சார மயானத்தில் இன்று காலை (23.05) தகனம் செய்யப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (22.05) இரவு மரணமடைந்த வவுனியா கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரினதும், வவுனியா, கிடாச்சூரி பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரினதும் உடல்கள் இன்று (23.05) காலை தகனம் செய்யப்பட்டன.

அவர்கள் இருவரதும் உடல்கள் வவுனியா சுகாதாரப் பிரிவினரால் எடுத்து வரப்பட்டு வவுனியா, பூந்தோட்டத்தில் உள்ள நகரசபையின் மின்சார மயானத்தில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டது.

அத்துடன், கிளிநொச்சி, புளியம்பொக்கனைப் பகுதியில் நஞ்சருந்திய நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த 15 வயது சிறுமியின் பிசீஆர் பரிசோதனையில்,

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த சிறுமியின் சடலமும் கிளிநொச்சி சுகாதார பிரிவினரால் எடுத்து வரப்பட்டு பூந்தோட்டம் மின்சார மயானத்தில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டது.