வவுனியாவில் சிக்கிய அக்கரைப்பற்று நகரசபை உப தவிசாளரின் வாகனம்? : நடந்தது என்ன?

2958

நகரசபை உப தவிசாளரின் வாகனம்..

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நேரத்தில் அக்கரைப்பற்று நகரசபை உப தவிசாளரின் வாகனம் உப தவிசாளரின்றி வவுனியா, குருமன்காடு பகுதியில் இன்று (25.04) நிறுத்தப்பட்டிருந்தது.

வவுனியா சுகாதார பரிசோதகர்களும், பொலிசாரும் இணைந்து குருமன்காடு பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வீதியோரத்தில் இருவர் முககவசம் சீராக அணியாத நிலையில் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது அவர்கள் தாம் பயணித்த வாகனம் எனக் கூறி அக்கரைப்பற்று நகரசபை உப தவிசாளரின் பெயர்ப் பலகை காட்சிப்படுத்தப்பட்ட சொகுசு காரினை எடுத்து வீதியோரமாக நிறுத்தி விட்டு சென்றிருந்தனர்.

இந்நிலையில், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கடந்த பல நாட்களுக்கு முன்னரே தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அக்கரைப்பற்று உப தவிசாளருடைய சொகுசுக் கார் வவுனியாவிற்குள் எவ்வாறு நுழைந்தது எனவும்,

அதனை அவர் இல்லாத நிலையில் அரச இலட்சனையுடன் கூடிய அவரது பதவிப் பலகையுடன் பிற நபர்கள் பயன்படுத்தியது எவ்வாறு எனவும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறித்த வாகனத்தில் பயணித்த இருவரும் முககவசத்தினை சீராக அணியாமையால் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பிசீஆர் பரிசோதனையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் குறித்த அரச இலட்சனையுடன் கூடிய பதவி நிலை பொறித்த வாகனத்தை உப தவிசாளர் இன்றி மாகாணம் விட்டு பிற மாகாணத்தில் அவரது பதவிப் பலகையுடன் பயன்படுத்தியமை தொடர்பில் பொலிசார் கவனம் செலுத்தியுள்ளனர்.