வங்கிகளில் கடன் பெற்றோருக்கு மகிழ்ச்சியான செய்தி : இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

4127

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு…

நாட்டில் கோவிட் வைரஸ் பரவல் அபாயத்தால் உருவாகியிருக்கும் பயணத்தடை காரணமாக வங்கிக் கடன்களை மீள செலுத்துவதற்கு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரையான நிவாரண காலத்தை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

சகல அங்கிகாரம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளுக்கு இது தொடர்பான அறிவித்தலை இலங்கை மத்திய வெளியிட்டுள்ளது. மே 15 வரை செயலிலுள்ள, செயலில் இல்லாத சகல கடன் வசதிகளுக்கும் ஆகஸ்ட் 31 வரை மீளச் செலுத்தும் நிவாரண காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிவாரண காலப்பகுதிக்கு அறவிடப்படும் வருட வட்டி 6.18% என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையினூடாக ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை நிலுவைக் காலம் நீடிக்கப்படும் வசதிகளில் தொழிற்படு மூலதனம், அடகு, தற்காலிக மேலதிகப் பற்றுகள், குறுங்கால நிதி வசதிகள் போன்றனவும் அடக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மே 15 முதல் ஆகஸ்ட் 31 வரையான நிவாரண காலப்பகுதிக்கு தண்ட வட்டி அறவீடு மேற்கொள்ளப்படக் கூடாது என சுட்டடிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிவாரண வசதியை வழங்குவதற்காக வங்கிகளால் மேலதிக கட்டணங்களை அறவிட முடியாது.

மேலும் ரூ.500,000க்கு குறைந்த பெறுமதியான காசோலைகளின் செல்லுபடியாகும் காலம் ஜுன் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடன் அட்டைகள் மற்றும் இதர கடன் வசதிகள் மீதான காலம் தாழ்த்திய கொடுப்பனவு கட்டணத்தை,

ஜுன் 30ஆம் திகதி வரை அறவிடுவதை நிறுத்துவதுடன், முற்கூட்டியே செலுத்தி தீர்ப்பதற்கான கட்டண அறவீட்டை தவிர்க்குமாறும் மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.