வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் : யானைகளின் தாக்குதலில் குடும்பஸ்தர் காயம்!!

602

elephant

வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் உள்ள கருவேப்பங்குளம் கிராமத்தில் காட்டுயானை குடிமனைகளுக்குள் புகுந்து தாக்கியதில் நேற்றைய தினம் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் குறித்த கிராமத்திற்குள் காட்டுயானைகள் புகுந்துள்ளன. இதனை மக்கள் விரட்ட முயற்சித்த போது அவர்களால் அதனை விரட்டமுடியவில்லை.

இதனால் கிராம மக்கள் கிராம அலுவலர், வவுனியா பிரதேச செயலகம், மாவட்ட செயலகம், வனத்துறை அதிகாரிகள் எனப் பலரிடமும் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர்களால் யானைகள் விரட்டப்படவில்லை.

இந் நிலையில் கடந்த நான்கு தினங்களாக குடிமனைப் பகுதியில் நின்ற யானை நேற்றைய தினம் குடும்பஸ்தர் ஒருவரை தாக்கியுள்ளது. இதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்தனம் முத்துராஜா (42) என்பவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிகாரிகளின் அசமந்தப் போக்கு காரணமாகவே யானை குடிமனைகளுக்குள் தங்கி நிற்பதாகவும் தாம் நித்திரையின்றி யானைக்கு காவல் இருப்பதாகவும் இவ் அசம்பாவிதத்திற்கு அரச அதிகாரிகளே காரணம் எனவும் இக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குடிமனைக்குள் புகுந்த யானைகளில் ஒன்று சுகவீனமடைந்துள்ளதாகவும் அதன் காரணமாக மீளவும் செல்ல முடியாமல் குடிமனைக்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளதாகவும், அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு சென்றபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பிரதேசவாசி ஒருவர் எம்மைத் தொடர்ப்புகொண்டு தெரிவித்தார்.